அண்மையில் நடந்து முடிந்த ஆசிரியர் போட்டிப்பரீட்சை பல்வேறுபட்ட சந்தேகங்களையும் குழப்பங்களையும் பட்டதாரிகளிடையே ஏற்படுத்தி இருந்த வேளையில் அப் போட்டிப்பரீட்சையில் 305தமிழ் மொழி மூலப்பட்டதாரிகளும் 67 சிங்கள மொழி மூல பட்டதாரிகளும் சித்தியடைந்து நேர்முகத்தேர்வுக்கு உள்வாங்கப்பட்டிருந்தனர்.
ஆனால் அவர்களில் 164 தமிழ் மொழி மூலப்பட்டதாரிகளும் 58சிங்கள மொழி மூல பட்டதாரிகளுமே சித்தியடைந்து அவர்களுக்கான நியமன ஏற்பாடுகள் மிக மிக விரைவாக 17.2.2017அன்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று பின்னர் நாளைக்கு (20) பிற்போட்டுள்ளனர்.
இருப்பினும் நேர்முக தேர்வுக்கு சென்ற பல தமிழ் மொழி மூலப்பட்டதாரிகள் இதில் நீக்கப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது. அது மட்டுமல்லாமல் இன்னும் எந்தவித தகவல்களும் நேர்முக தேர்வுக்கு சென்றவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலைப்பாடு பட்டதாரிகளிடையே குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன். மாகாண சபையினுடைய செயற்பாடுகளில் நம்பிக்கையின்மையினையும் ஏற்படுத்தியுள்ளது.
போட்டிப்பரீட்சையில் சித்திப்பெற்றும் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் மிகுந்த மன உளைச்சலை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக வழங்கப்படவிருக்கின்ற நியமனங்களில் மிகுந்த அரசியல் செல்வாக்கும், பண பரிமாற்றமும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
பல்கலைகழகத்திலிருந்து வெளியேறி பல வருடங்கள் கடந்த நிலையில் தொழில் கிடைக்கும் என்று காத்திருந்த பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் , மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்ள தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.