போதியளவு புள்ளிகளை பெறாத கிழக்கு பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவில்லை. புள்ளிகள் பெற்ற 222 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது என்று கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் 222 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் போது நியமனம் கிடைக்கப் பெறாத பட்டதாரிகள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பட்டதாரிகளுக்கு போட்டிப் பரீட்சை வைத்தே ஆசிரியர் நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். நியமனம் பெறாதவர்கள் போதிய புள்ளிகளை பெறவில்லை. பட்டதாரிகள் இவ்வாறு போராட்டம் நடத்துவதையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம்.
தமிழ் பாடசாலைகளில் தமிழ் மொழி, இரண்டாம் மொழி சிங்களம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்யும் வகையில் போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டது. 250 வெற்றிடங்களை நிரப்புவதற்கு போட்டிப்பரீட்சை நடத்தப்பட்ட போதிலும் 164 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். வரலாறு பாடத்திற்கான 89 வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தமிழ் மொழிக்கு 120 வெற்றிடங்கள் உள்ளன ஆனால் 51 பேர் மட்டுமே தெரிவாகினர். சிங்கள மொழிக்கு 20 வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும் 6 பேர் மட்டுமே தெரிவாகினர். தொழில்நுட்பத்திற்கு 20 வெற்றிடங்கள் உள்ள போதிலும் குறைவானவர்களே தெரிவாகினர்.
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில், இரண்டு பாடங்களிலும் 40இற்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற 164 தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கும் 58 சிங்கள மொழி மூல ஆசிரியர்களுக்கும் நேற்று நியமனங்கள் வழங்கப்பட்டன.
யாரையும் நாங்கள் தடை செய்யவில்லை. நிர்வாக ஒழுங்குகளை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். நிர்வாக ஒழுங்கின் அடிப்படையில் போட்டிப்பரீட்சையினூடாகவும் நேர்முகத் தேர்வினூடாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். யாரையும் பாதிக்கச் செய்யும் நோக்கோடு நியமனங்கள் வழங்கப்படவில்லை. நிர்வாக அதிகாரிகள், ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரின் கடுமையான முயற்சினாலேயே இந்நியமனங்கள் வழங்கப்பட்டன என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
.