இலங்கையில் ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 704 சிறுவர்கள் வேலை செய்பவர்களாக உள்ளதாகவும், அவர்களுள் 43 ஆயிரத்து 714 சிறுவர்கள், சிறுவர் தொழிலாளர்களாக உள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் 2016 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் 5 முதல் 17 வயது வரை 45 இலட்சத்து 71 ஆயிரத்து 442 சிறுவர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அவர்களுள், 41 இலட்சத்து 18 ஆயிரத்து 781 சிறுவர்கள் பாடசலைக்கு செல்கின்றதாகவும், ஏனைய 4 இலட்சத்து 52 ஆயிரத்து 661 பேர் பாடசாலைக்கு செல்வதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள சிறுவர்களின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 9.9 சதவீதமாக இது பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 704 சிறுவர்கள் வேலை செய்பவர்களாக உள்ளாகவும், அவர்களுள், 59 ஆயிரத்து 990 சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுகின்றபோதும்;, சிறுவர் தொழிலாளர்களாக அவர்கள் வகைப்படுத்தப்படவில்லை.
எஞ்சியுள்ள 43 ஆயிரத்து 714 சிறுவர்கள், சிறுவர் தொழிலாளர்களாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர் தொழிலாளர்களுள், 4 ஆயிரத்து 707 பேர் மட்டுமே அபாயகரமற்ற தொழிலில் ஈடுபவதாகவும், ஏனைய 39 ஆயிரத்து ஏழு சிறுவர்கள் அபாயகரமான தொழிலில் ஈடுபடுவதாகவும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் செயற்பாடுகளின் அடிப்படையிலான வகைப்படுத்தல்களின்படி, 10 இலட்சத்து 85 ஆயிரத்து 908 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லும் செயற்பாட்டில் மட்டும் ஈடுபட்டுள்ளனர்.
3 இலட்சத்து 17 ஆயிரத்து 158 சிறுவர்கள் வீட்டுப் பராமரிப்பு பணிகளில் மட்டும் ஈடுபடுகின்றனர். 6 ஆயிரத்து 580 சிறுவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுகின்றனர்.
29 இலட்சத்து 92 ஆயிரத்து 582 சிறுவர்கள், பாடசாலைக்கு செல்வதுடன், வீட்டு பராமரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
38 ஆயிரத்து 111 சிறுவர்கள் பாடசாலைக்கு சென்றுகொண்டு, வீட்டு பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன், கொருளாதார நடவடிக்கைகளிரும்ஈடுபடுகின்றனர்.
56 ஆயிரத்து 834 சிறுவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், வீட்டுப் பராமரிப்பு பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.
2 ஆயிரத்து 179 சிறுவர்கள் பாடசாலைக்கு சென்றுகொண்டு பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுகின்றதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 77.7 சதவீதமானோர் கிராமப் புறங்களிலும், 17 சதவீதமானோர் நகரப் பகுதிகளிலும், 5.3 சதவீதமானோர் பெருந்தோட்டப் பகுதிகளிலும் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.