பதவியுயர்வுகளில் தமிழ் மொழி மூல அதிகாரிகள் புறக்கணிப்பு

கல்வியிலாளர் சேவை தரம் 2/1 இற்கு பதவி உயர்த்தப்பட்டவர்களில் தமிழ் பேசும் சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்வாங்கப்படவில்லை என்று கல்வித்துறைசார் உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பதவி உயர்வுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் கல்வித்துறைசார் உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கபட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு கல்வியலாளர் சேவை தரம் 2/ 11இல் இருந்த தரம் 2/1 இற்கு பதவியுயர்வை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதனடிப்படையில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வையடுத்து பதவியுயர்வு வழங்கப்பட்டவர்கள் பட்டியல் கல்வியமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கள மொழி மூல அதிகாரிகள் 41 பேரின் பெயர்கள் பட்டியலில் காணப்பட்ட போதிலும் தமிழ் பேசும் சமூகத்தினர் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

முன்னைய சேவை பிரமாணக்குறிப்பிற்கமைய 2016 பெப்ரவரி மாதம் மேற்குறிப்பிடப்பட்ட அதே சேவைக்காக 44 வெற்றிடங்களுக்காக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. அதில் தமிழ் மொழிமூலமான கல்வியியற் கல்லூரிகளான, அட்டாளைச்சேனை, கொட்டகல, வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, தர்கா நகர் சேர்ந்த விரிவுரையாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

நேர்முகத்தேர்வுக்கு தோற்றிய போதும் மேற்கூறப்பட்ட கல்வியியற்கல்லூரிகளைச் சேர்ந்த ஒருவர் கூட பதவியுயர்விற்கு உள்வாங்கப்படாமை சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. அண்மைக்காலமாக தமிழ் மொழி மூல கல்வியியற் சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பதவியுயர்வுகளில் தமிழ் மொழி பேசுவோர் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் நூறு பேருக்கு பதவியுயர்வு வழங்கப்படும் போது வெறும் நான்கைந்து தமிழ் மொழி மூல அதிகாரிகளுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

மறைந்த ஜனாதிபதி பிரேமதாஸவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இன விகிதாசார அடிப்படையிலான பதவியுயர்வுக் கொள்கை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என கல்வி நிர்வாக சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நன்றி- தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435