ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து அதன் அங்கத்தவர்களுக்கு 30% முன்கூட்டிய சலுகை கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை தேவைகளை அவர்கள் அறிந்திருப்பது அவசியமானதாகும்.
பின்வரும் அடிப்படை தகைமைகளை கொண்டவர்கள் மட்டுமே குறித்த நிதியத்தில் இருந்து 30% முன்கூட்டிய சலுகைக் கொடுப்பனவை பெற முடியும்
குறித்த சலுகைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரி தற்போது சேவையில் இருந்தல் வேண்டும்.
பத்து வருடத்திற்கு குறையாத காலத்திற்கு ஊழியர் சேம லாப நிதியத்திற்கு தனது பங்களிப்பு கட்டணத்தை செலுத்தியிருத்தல் வேண்டும்.
அவரது ஊழியர் சேல லாப நிதியத்திற்கான தனிப்பட்ட கணக்கில் மூன்று இலட்சம் ரூபாவுக்கு குறையாத இருப்பு இருத்தல் வேண்டும். அதாவது இலங்கை மத்திய வங்கியினால் கணக்காய்வு செய்யப்பட்ட அவரது அங்கத்துவ கணக்கில் மூன்று இலட்சம் ரூபாவுக்கும் குறையாத தொகை இருப்பில் இருக்க வேண்டும்.
1958ம் ஆண்டின் 19ம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தில் 2012ம் ஆண்டில் 02ம் இலக்க சட்ட திருத்தத்தின்படி குறித்த நிதியத்தின் அங்கத்தவர்களுக்காக வீடமைப்பு மற்றும் வைத்திய சிகிச்சை தேவைகளுக்காக குறித்த நிதியத்தின் தற்போதும் சேவையில் உள்ள ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்காக இந்த 30% முன்கூட்டிய சலுகைக் கொடுப்பனவு திட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2015ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி முதல் நடைமுறைக்கிடப்பட்டுள்ளது.
அங்கத்துவரொருவர் சொந்தமான காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காகவும், வீடொன்றை நிர்மாணிப்பதற்கு காணி கொள்வனவு செய்வதற்காகவும், வீடு சொத்துக்கள் மீதுள்ள அடகு மீட்பதற்காகவும், அங்கீகரிக்கப்பட்ட வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட வீடமைப்புக் கடனில் மீதியாகவுள்ள தொகையை செலுத்துவதற்காகவும் வீடமைப்பு விடயங்களுக்காக ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவரொருவர் சலுகைக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அபோல் வைத்திய சிகிச்சை விடயங்களுக்காக குறித்த கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் பின்பவரும் விடயங்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பிக்க முடியும்.
இருதய சத்திரசிகிச்சை, பைபாஸ் சத்திர சிகிச்சை, புற்றுநோய் சத்திரசிகிச்சை, சிறுநீரகம் மாற்றுதல் சத்திரசிகிச்சை, சிசேரியன் சத்திரசிகிச்சை, விபத்தேற்பட்டமையினால் பதினான்கு நாட்களுக்கு குறையாத காலம் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளும் சிகிச்சை என்பன உள்ளடங்குகின்றன.
அத்துடன் அங்கத்தவர் தனது துணைவர் பிள்ளைகளுக்காகவும், குறித்த சலுகை கொடுப்பனவை பெற விண்ணப்பிக்கலாம். மேற்கூறப்பட்ட ஒருவிடயத்திற்காக ஒருவர் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆகக்கூடிய தொகை இருபது இலட்சத்திற்கு (20,000,00/=) உட்பட்டதாகும்.
குறித்த முன்கூட்டிய சலுகைக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படைத் தகைமைகளைக் குறிப்பிட வேண்டிய படிவத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரியின் முதலெழுத்துக்களுடன் பெயர், முதலெழுத்து குறிக்கின்ற பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டையின் இலக்கம், தொலைபேசி இலக்கம், விண்ணப்பதாரியின் தற்போதைய ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்கின்றாரா என்ற விபரம், தொழில் தருநரின் இலக்கம், குறியீடு, அங்கத்துவ இலக்கம், தற்போதைய சேமலாப நிதிய இலக்கம், இதற்கு முன்னர் சேவையாற்றிய நிறுவனங்கள் இருப்பின் அவற்றின் தொழில் தருநரின் இலக்கம், குறியீடு அவற்றுடன் விண்ணப்பதாரிக்கு அந்நிறுவனத்தில் உரித்தான ஊழியர் சேமலாப நிதிய அங்கத்துவ இலக்கம் என்பன தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
அவற்றுடன் சலிகைக் கொடுப்பனவுக்கு விண்ணபிக்கும் நோக்கமும் குறிப்பிடப்பட வேண்டும். வீடமைப்பு தொடர்பாக விண்ணப்பிக்கும் பொது ஆதனத்தின் சொத்து உரிமையை உறுதிப்படுத்துவதற்கான பிரசித்த நொத்தாரிசின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். அதில் ஆதனம் பற்றிய விபரங்கள், உறுதிப்படுத்தும் பிரசித்த நொத்தாரிஸ் பற்றிய விபரங்கள் என்பன உள்ளடக்கப்பட்டு விண்ணப்பதாரியால் அதற்குரிய படிவத்தில் பூரணப்படுத்தி உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், ஏற்னவே ஊழியர் சேமலாப நிதியத்தைப் பிணையாக வைத்து வீடமைப்புக் கடன் பெற்றிருந்தால் அது பற்றிய விபரமும் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியம். சரியான தேவையான தகவல்களைக் குறிப்பிட்டு உரிய படிவங்களை பூர்த்தி செய்து, தொழில் ஆணையாளர், ஊழியர் சேமலாப நிதியம், தொழிற் திணைக்களம், கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். குறித்த விண்ணப்பம் உள்ளடக்கப்பட்ட கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘30% முன்கூட்டிய சலுகைக் கொடுப்பனவு செலுத்தல்’ என்று குறிப்பிட வேண்டும்.
நேரில் குறித்த விண்ணப்பத்தை ஊழியர் சேமலாப நிதிய அலுவலகத்தில் கையளிப்பதாயின் மேற்குறித்த கொழும்பு 05இல் உள்ள தொழில் செயலகத்தின் ஐந்தாம் மாடியிலுள்ள 30% முன்கூட்டிய சலுகைக் கொடுப்பனவை செலுத்தும் ஊழியர் சேமலாப நிதியக் கிளையில் கையளிக்கலாம்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்துவரொருவர் மேற்படி சலுகைக் கொடுப்பனவைப் பெற்றுத் தனது தேவையை நிறைவேற்றிக்கொள்ளும் போது வட்டிகுக் கடன் பெறும் நிலையில் இருந்து விடுபடுகின்றார். இது ஊழியர் சேமலாப நிதியத்தால் அதன் அங்கத்தவருக்கு வழங்கப்படும் பெறுமதியான சேவையாகும்.
நன்றி- தினகரன்