மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பல்வேறு தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து நாடாளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் ஆசிரிய, சுகாதார மற்றும் போக்குவரத்துதுறை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் பணிப்புறக்கில் ஈடுபடவுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன டி சொய்சா கருத்து வெளியிடுகையில்,
சுகாதார அமைச்சரின் பேச்சுக்கோ அல்லது வேறு எவரின் பேச்சுக்கோ அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்கமைய எதிர்வரும் 5 ஆம் திகதி சுகாதாரத் துறையிலுல், கல்வித் துறையிலும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும். எமது போராட்டம் வெற்றிபெறும்வரை இந்தப் போராட்டம் தொடரும்.
பல்வேறு தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்துக்க ஆதரவளித்துள்ளன. இது ஆரம்பம் மட்டுமே. இதற்கு அரசாங்கம் உரிய முறையில் தீர்வு காணாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு கூடி தீர்மானிக்கும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் போராட்டத்துக்கு தமது சங்கம் ஆதரவளிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.