தலவாக்கலை தோட்ட நானுஓயா பிரிவில் 100 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று (18) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளை வழங்கப்படாமைக்கும், தோட்ட தொழிலாளர்களை தேவையற்ற பிரச்சினைகளுக்குள்ளாக்கி வேலைநிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தொழிலாளர்கள்,
கடந்த மாதத்தில் இந்த தோட்டத்தில் மரண சடங்கு ஒன்று நிகழ்ந்துள்ளது. இதன்போது மரண சடங்கினை நடத்தவதற்காக தொழிலாளர்களிடம் மாதாந்தம் அறவிடப்படும் மரண நிதியினை தோட்ட நிர்வாகத்திடமிருந்து, மரண கமிட்டி உறுப்பினர்கள் கோரிய போது தோட்ட நிர்வாகம் வழமை போல் வழங்க வேண்டிய பணத்தை விட குறைவாகவே வழங்கியுள்ளது.
இது தொடர்பாக தோட்ட தலைவர்கள் தலைமை அதிகாரியிடம் கலந்துரையாடிய போது, தோட்ட அதிகாரி தம்மிடம் தகாத முறையில் பேசியதாக தெரிவித்து தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் குறித்த தலைவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து தோட்ட அதிகாரி குறித்த தலைவரை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார் என போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பணிநீக்கப்பட்ட குறித்த தலைவருக்கு உடனடியாக தொழில் வழங்க வேண்டும் எனவும், பணி வழங்காத பட்சத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதாகவும், பிரச்சினைகள் வரும்பொழுது உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதாகவும், நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது தோட்ட அதிகாரியால் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை அழைத்து வந்தமை தமக்கு அச்சத்தை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.