வௌிநாடுகளுக்கு தாதியர் மற்றும் பராமரிப்பாளர் பணிக்கு செல்ல விரும்புவோருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்க அவுஸ்திரேலிய நிறுவனமான Talisium இணக்கம் தெரிவித்துள்ளது.
பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (09) வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இலங்கை சார்பில் பணியகத் தலைவர் ஆர்.கே.ஒபேசேக்கர Talisium நிறுவனம் சார்பில் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி டோனி பிரென்னன் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
தாதியர் மற்றும் பராமரிப்பாளர்களை பயிற்றுவிப்பதில் உலக நன்மதிப்பை பெற்ற Talisium நிறுவனமானது வௌிநாடுகளுக்கு சுகாதார துறைசார் பணியில் ஈடுபட விரும்புகிறவர்களை பயிற்றுவிக்கவுள்ளது. முதற்கட்டமாக தாதியர் கற்கை நெறியை பூர்த்தி செய்து தகுதி பெற்றவர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்கவுள்ளதுடன் அவுஸ்திரேலிய தரத்திற்கமைவான சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து பயிற்சியற்றவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சிகள் பணியகத்தின் பயிற்சி மத்திய நிலையங்களில் நடத்தப்படவுள்ளன.