புதிய அமைச்சுக்கு கைமாற்றப்பட்டது ETF

அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியமானது (Employees Trust Fund) புதிய அமைச்சுக்கு கைமாற்றப்பட்டுள்ளது.

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியமானது, பிரதமர் தலையிலான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் இருந்தது.

இந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட அமைச்சுக்களின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்பாக 09 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியமானது திலக் மாரபனவின் அபிவிருத்திப் பணிப் பொறுப்புகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊ.ந.பொ. நிதியத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி தாபிக்கப்பட்டிருந்தது.

சட்டத்தின் ஏற்பாடு, அமைச்சரினால் ஆக்கப்பட்டு, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு பொறுப்புவாய்ந்த எந்தவொரு வகுப்பு அல்லது வகைக்குரித்தான பொறுப்புவாய்ந்த ஒவ்வொரு அரச மற்றும் தனியார் துறைக்கும் பிரயோகிக்கப்படும்.

சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் குடிபெயர் பணியாளர்கள் தமது சொந்த விருப்பின் பேரில் நிதியத்திற்கு உதவுதொகை செலுத்தவும், அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

ஊ,ந,பொ.நி. சபையின் செயற்பாடுகளை பரவலாக்குவதற்கும், தனது அங்கத்தவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும் ஊ,ந,பொ.நி.சபை 1995 ஆம் ஆண்டில் கிளை வலைப்பின்னலொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

நிதியத்தின் தற்போதைய செயற்பாடுடைய அங்கத்துவம் சுமார் 2.5 மில்லியன் என்பதுடன், 76 ஆயிரம் தொழில்தருநர்களையும் உள்ளடக்குகின்றது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியில் நிதியத்திடமுள்ள பெறுமதி 218.5 பில்லியன் ரூபாவாகும்.

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் அறிக்கையானது வருடாந்தம் வெளியிடப்படும். இவ்வாறான நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இதுவரைக் காலமும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் வருடாந்த அறிக்கையை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியானது உரிய தொழிலாளர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படாமல், மோசடியான முறையில், வேறு செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பவதாகவும், இதனால் தாம் பாதிக்கப்படுவதாகவும், தொழிலாளர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், ஏற்கனவே அவன் கார்ட் ஆயுதக்கப்பல் விவகாரத்தில், அதனை பாதுகாக்க முயற்சித்ததால் வெளியிடப்பட்ட எதிர்ப்பையடுத்து, பதவி விலகிய அமைச்சரான திலக் மாரபனவின் பொறுப்பின்கீழ் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியமானது கொண்டுவரப்பட்டுள்ளது.

218.5 பில்லியன் என்ற பாரியளவு நிதியைக் கொண்டுள்ள இந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு கிடைக்கவேண்டிய நிதி அவர்களுக்கு கிடைப்பதை உறுதிபடுத்த புதிய அமைச்சரின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாக தொழிலாளர் வர்க்கத்தினர் மீது அக்கறை கொண்டுள்ள தரப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435