கட்டாரில் ஏற்பட்டு இராஜதந்திர குழப்ப நிலைமை தீவிரமடையுமானால், அங்குள்ள இலங்கையர்களை பாதுகாகப்பதற்குத் தேவையான நடடிக்கைகளை அங்குள்ள
இலங்கை தூதரகத்தினூடாக அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.
கட்டாரில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
கட்டாரில் பணியாற்றுகின்ற பெரும்பாலான இலங்கையர்களின் கடவுச் சீட்டுகள், அவர்களின் தொழில்தருனர் வசமே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கட்டாரில் அவசர நிலைமையொன்று ஏற்படுமாயின், தொழில்தருனரிடமிருந்து தமது கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை இலங்கைப் பணியாளர்களுக்கு ஏற்படலாம் என கட்டார் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இதனைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள இலங்கையர்கள் குறித்த ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான விசேட விமான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படுவதாக கட்டாருக்காக இலங்கைத் தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த புதன்கிழமை கட்டாரிலுள்ள இலங்கைகயைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 22 நிறுவனங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கட்டாரில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்தும் ஆராயப்பட்டதாகவும் கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.