2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஒரே பங்குகளை மீண்டும் மீண்டும் கொள்வனவு செய்ததன் ஊடாக 216 மில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதியத்துக்கு (EPF) நட்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், நேற்று இடம்பெற்ற விசாரணைகளின்போது, பிணை முறி விநியோகம் தொடர்பான மத்திய வங்கியின் கோப்புகள் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது மத்திய வங்கியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மேலதி பணிப்பாளர் வசந்த அல்விஸ் வெளியிட்ட தகவலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் ஊழியர் சேபலாப நிதியத்தினூடாக 580 கோடி ரூபாவை பெப்பர்ச்சுவல் ஸ்டெஸரிஸ் நிறுவனம் இலாபமாக பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில் மேலும் தெரியவருவதாவது,
2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஊழியர் சேமலாப நிதியத்தின் 100 ரூபா பிணை முறிகளை 110 ரூபா 56 சதத்துக்கு ஆரம்ப கொடுக்கல் வாங்கல் செய்தவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அந்த ஆரம்ப கொடுக்கல் வாங்கல் செய்தவரிடமிருந்து குறித்த பங்குகளை 110 ரூபா 56 சதத்துக்கு பெப்பர்ச்சுவல் ஸ்டெரிஸ் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது.
இதையடுத்து, குறித்த ஆரம்ப கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டவரால், பெப்பர்ச்சுவல் ஸ்டெரிஸ் நிறுவனத்திடமிருந்து குறித்த பங்குகள் 119 ரூபாவுக்கு மீண்டும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், அந்த ஆரம்ப கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டவரிடமிருந்து, 8 ரூபா 94 சதத்தை மேலதிகமாக செலுத்தி, ஊழியர் சேபலாப நிதியம் குறித்த பங்குகளை கொள்வனவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக ஒரே பங்குகளை மீண்டும் கொள்வனவு செய்ததன் ஊடாக 216 மில்லியன் ரூபாவை ஊழியர் சேமலாப நிதியத்துக்கு மேலதிகமாக செலுத்த வேண்டி ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.