வட மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள், வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை நேற்று (09) மாகாண சபைக்குள் செல்லவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட மாகாண சபையின் 92 ஆவது அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது அமர்வில் பங்கேற்க மாகாண சபைக்கு சென்ற முதலமைச்சரவை, போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகள் வழிமறித்தனர்.
இதன்போது பட்டதாரிகள் தொடர்பில் தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தாம் கலந்துரையாடிய விடயங்களை வடக்கு மாகாண முதலமைச்சர் பட்டதாரிகளிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனினும், இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பட்டதாரிகள் முதல்வர் விக்னேஸ்வரனை மாகாண சபைக்குள் செல்லவிடாது தடுத்தனர். இதன்போது வடக்கு முதலமைச்சருக்கும், பட்டதாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபடும் 3 ஆயிரம் பேருக்கும் சாதகமான தீர்வொன்றை பெற்றுத்தருமாறு முதலமைச்சரிடம் பட்டதாரிகள் வலியுறுத்தினர். அத்துடன், தம்மால் தொடர்ச்சியாக வீதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், வேலையற்ற பட்டதாரிகளுக்கு பதில் வழங்கிய வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவாதத்துக்கு அமைய தாம் உங்களுடன் உரையாடுவதாக பட்டதாரிகளிடம் வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபையில் மொத்தமாக பட்டதாரிகளுக்கு ஆயிரத்து 171 வெற்றிடங்கள் இருப்பதையும் இங்குள்ள மத்திய அரசின் மாகாண திணைக்களங்களில் 329 வெற்றிடங்கள் இருப்பதையும் மொத்தமாக ஆயிரத்து 500 பேர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பைப் பெறமுடியும் என்பதை ஜனாதிபதியிடம் விளக்கமாக எடுத்துரைத்ததாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு அவர்களை இணைப்பது பற்றியும் பேசப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் வெற்றிடங்கள் பல இருப்பதை ஜனாதிபதிக்கு எடுத்துக் காட்டியபோது அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கைகள் எடுப்பதாக விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உறுதியளித்தாகவும் பட்டதாரிகளிடம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தம்மால் உத்தரவாதங்களை தரமுடியாதென்றும் மத்திய அரசாங்கமே அவற்றைத் தரமுடியும் என்றும் பட்டதாரிகளிடம் எடுத்துரைத்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவர்கள் அதனைக் கருத்திற்கொள்ளவில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையில், இது தொடர்பில் கலந்துரையாடி, 18 ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இது தொடர்பில் பதிலொன்றை வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், வேலையற்ற பட்டதாரிகள் தமது போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளனர்.