கிழக்குப் பல்கலைக் கழக நிருவாக பகுதியில் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை இன்மை மற்றும் மாணவர்கிளால் தாக்கப்பட்ட பாதுகாப்பு ஊழியருக்கு நீதி கிடைக்காத காரணத்தினால்; பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று (09) புதன்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில்; ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக கல்விசார ஊழியர் சங்கத்தின் செயலாளர் தங்கவேல் சிறிதரன் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை நடைபெற்றது இக்கூட்டத்தில் பல்கலைக் கழகத்தின் தற்போதைய சூழ்நிலை ஆராயப்பட்டு ஊழியர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்திலுள்ள பெரும்பான்மை இன மாணவர்கள் ஐந்து அம்ச கோரிக்கை முன்வைத்து 63 வது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று செவ்வாய்கிழமை (08) பிற்பகல் மாணவர்களால் நிருவாகக் கட்டடம் முற்றுகையிடப்பட்டபோது அதனை கடமையின் நிமிர்த்தம் தடுக்க வந்த பெரும்பான்மை இன பாதுகாப்பு ஊழியரான எச்டி.சி.டி.ரணசிங்க (வயது 37) மாணவர்களால் தாக்கப்பட்டதில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த ஊழியர் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
பல்கலைக் கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை நேற்று (08) இரவு முதல் சிங்கள மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நிருவாக பகுதியில் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை இல்லாத காரணத்தினால் கல்வி சார ஊழியர்கள் அனைவரும் நிருவாகக் கட்டடத்திலிருந்து வெளியேறி தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடமையில் இருந்த பாதுகாப்பு ஊழியரைத் தாக்கிய மாணவர்கள் இனம்காணப்பட்டு சட்டரீதியாக தண்டனை தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை நேற்ற இரவு பெரும்பான்மை இன பெண் மாணவர்கள் கடமையில் இருந்த தற்காலிக பெண் பாதுகாப்பு ஊழியரையம் தாக்கியுள்ளனர். இதையடத்து கிழக்குப் பல்கலைக் கழக பாதுகாப்பு ஊழியர்கள் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.