நாட்டின் அதிபர் சேவைக்கு இணையாக பணியாற்றும் கடமை நிறைவேற்று அதிபர்கள் மற்றும் மிகை நிரப்பு அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிபர் சேவையில் மிகை நிரப்பு மற்றும் கடமை நிறைவேற்றும் அதிபர்களாக கடமையாற்றுபவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் (11) சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மிகை நிரப்பு அதிபர்கள் மற்றும் கடமை நிறைவேற்றும் அதிபர்கள் என கடந்த காலங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டன.
2,500 இற்கும் மேற்பட்ட கடமை புரியும் அதிபர்கள் உள்ளனர். அவர்களில் பலர் 5 வருடங்களுக்கு மேல் அந்த கடமை நிறைவேற்று காலத்தை நிறைவுசெய்துள்ளனர். பலர் 55 வயதைக் கடந்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ளனர்.
2,400 பேர்வரை இருந்த அந்த அதிபர்களில், சுமார் 400 பேரளவில் ஓய்வுபெற்றுச் சென்றுள்ள நிலையில், 2ஆயிரம் பேரளவில் தற்போது பணியாற்றுகின்றனர்.
நாடுமுழுவதும் சுமார் 2, 400 கடமை நிறைவேற்று அதிபர்கள் உள்ளனர். அவர்களில் 226 பேர் வட மாகாணத்தில் உள்ளனர்.
குறிப்பாக வட மாகாணத்தில் தீவக பகுதிகளில், பெரும்பாலான பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லை. கடமை நிறைவேற்றும் அதிபர்கள்தான் பாடசாலை பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இதேவேளை, சுமார் 2000 மிகை நிரப்பு அதிபர்கள் சேவையாற்றுகின்றனர். வடக்கு மாகாணத்தில் மட்டும் 164 மிகை நிரப்பு அதிபர்கள் சேவையாற்றுகி;ன்றனர். இவர்களுள் சிலருக்கு அதிபர் தரம் 3றும், அதிபர் தரம் 2டும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், மிகை நிரப்பு அதிபர்கள் மற்றும் கடமை நிறைவேற்று அதிபர்கள் என அதிபர் சேவைக்கு இணையாக கடமையாற்றுபவர்களுக்கு, அவர்களின் சேவைக்காலம் மற்றும் வயதெல்லையைக் கருத்திற்கொண்டு பரீட்சைகள் இன்றி பதவி உயர்வு வழங்கவும், சம்பள உயர்வு வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.