பெருந்தோட்டப் பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாக இணைக்கப்பட்டுள்ள மூவாயிரம் பேரையும் ஆசிரியர் சேவையில் உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கல்வியமைச்சு இதுவரை அனைத்து நியமனங்களையும் அரசியல் யாப்பிற்கமையவே வழங்கியுள்ளது. இந்நிலையில் மூவாயிரம் பேரை ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை அநீதியான செயல். எனவே அவர்களை உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கவேண்டும் என்று அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட மூவாயிரம் பேருக்கும் முதற்கட்டமாக ஆறாயிரம் ரூபாவும் இரண்டாம் கட்டமாக பத்தாயிரம் ரூபாவும் கொடுப்பனவு வழங்கப்பட்டது. மிகவும் பின்தங்கிய பாடசாலைகளாக மலையக பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவ்வாசிரிய உதவியாளர்கள் மிக அர்ப்பணிப்புடன் பணியாற்றவேண்டும். அப்பாடசாலை மாணவர்கள் மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவ்வாசிரிய உதவியாளர்களும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்களுக்கு இவ்வாறு குறைந்த கொடுப்பனவுடன் அதிக சேவையை பெறுவது அநீதியான செயல்.
இதனை கவனத்திற்கொண்டு அரசாங்கம் ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.