கடந்த அரசாங்கத்தின் போது நியமனம் வழங்கப்பட்ட ஹட்டன் கல்வி வலயத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றத்தின் போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2007ம் ஆண்டு நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தில் 10 வருடங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வருடத்துடன் 10 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் ஏனைய மாகாணங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் ஹட்டன் கல்வி வலயத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்று தூர பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்விடமாற்ற பிரச்சினை தொடர்பில் ஹட்டன் வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோரிடம் தெரியப்படுத்தியுள்ளபோதிலும் இதுவரையில் சாதகமான தீர்வு பெறப்படவில்லை என்று விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் ஹட்டன் கல்வி வலய பணிப்பாளர் பி. ஸ்ரீதரன் கருத்து தெரிவிக்கையில், இடமாற்றம் கிடைக்காத ஆசிரியர்கள் அதிபரினூடாக பெயர் பட்டியல் என்னிடம் சமர்ப்பிக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்க தாம் தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், சட்டதிட்டங்களுக்குட்படாது அரசியல் செல்வாக்கை பயன்படுத்துவதனால் நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய இடமாற்றம் தேவையானவர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது மனித உரிமை மீறல் செயலாகும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் ம. ராமேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், குறித்த கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டால் பதிலாக பணியாற்றுவதற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் புதிதாக நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களும் அப்பிரதேச பாடசாலைகளில் பணியாற்ற மறுப்பதால் தாமதம் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இம்முறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி முடித்து வெளியேறும் ஆசிரியர்களுக்கு அப்பிரதேசங்களில் நியமனம் வழங்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
நன்றி- கருடன்