சகல மாகாணங்களிலும் உள்ள கடமை நிறைவேற்று அதிபர்களையும் அதிபர் சேவை தரம் 111 இணைக்க வேண்டும் என போலியான காரணங்களை தெரிவித்து வட மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (11) வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முன்னுதாரணமாக திகழ வேண்டிய வடக்கு மாகாணசபை ஆட்சேர்ப்பு பிரமாணக்குறிப்புகளை மீறியுள்ளது.
2009ம் ஆண்டுக்கு முன்னர் கடமை நிறைவேற்று அதிபர்களாக பணியாற்றியவர்களை நிரந்தமாக்கிய பின்னர் மீண்டும் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவதில்லை என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் கடந்த 20 வருடங்களாக பணியாற்றியவர்கள் என்ற பொய்யான காரணங்களை கூறியும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் கல்வித்துறையில் நியாயமற்ற நியமனங்களை வழங்கத்தூண்டி மேற்கொள்ளப்படும் இத்தகைய பிரேரணைகளை மீளாய்வு செய்ய வேண்டும்.
அரசியல் பழிவாங்கல்கள் என்று கூறி தற்போதைய அரசாங்கம் அரசியல் ஆதாயம் கருதி வழங்கவிருந்த 4000 நியமனங்களை ஆசிரியர் சங்கத்தின் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ்வாறான நியாயமற்ற நியமனங்களுக்கு ஆசிரியர் சங்கம் எப்போதும் துணை நிற்காது.
எனவே, இத்தகைய தீர்மானங்கள் தொடர்பான உண்மைக் காரணங்களை வட மாகாணசபை உறுப்பினர்கள் ஆராய்ந்து இப்பிரேரணையை மீளாய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.