இஸ்ரேலில் விவசாயத்துறை வேலைவாய்ப்பினை பெற்ற 38 பேருக்கான விமான டிக்கட்டுக்களை கையளிக்கும் நிகழ்வு கடந்த 12ம் திகதி வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது.
இஸ்ரேலுடன் கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய இதுவரையில் 741 பேர் இஸ்ரேலில் விவசாயத்துறையில் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், ஒப்பந்த காலம் நிறைவுற்ற பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருப்பது இஸ்ரேலில் மேலும் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கு தடையாக உள்ளது. இதனால் எமது நாட்டின் மரியாதையும் கெடுகிறது. எனவே தொழில்வாய்ப்பை நாடிச் செல்லும் இலங்கையர்கள் தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும். அது அவர்களின் கடமை.
ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் நாடு திரும்புவோருக்கு மீண்டும் அந்நாட்டுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில், வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஆர்.கே. ஒபேசேக்கர, பதில் பணிப்பாளர் சட்டத்தரணி உபுல் தேஷப்பிரிய, வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் தலைவர் லஷ்மன் அபேகுணரத்ன, பொது முகாமையாளர் தரங்க ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.