கல்வி அமைச்சால் வழங்கப்படும் ஆசிரியர் இடமாற்றங்களை இரத்து செய்வதற்காக மாணவர்களை காரணமாக பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், சில பாடசாலைகளின் ஆசிரியரகள் கல்வி அமைச்சால் வழங்கப்படும் இடமாற்ற நியமனங்களை இரத்துச் செய்வதற்காக மாணவர்களை காரணமாக பயனப்படுத்துவதாக கல்வி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச சேவையில் 5 ஆண்டுகள் சேவையாற்றுபவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது. எனினும், ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகள் சேவையாற்றியவர்களுக்கே இடமாற்றம் வழங்கப்படுகிறதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, 10 ஆண்டுகளுக்கு அதிக காலம் சேiயாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவது தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இதனை எவராலும் ஏற்காமலிருக்க முடியாது.
இடமாற்றத்தை இரத்துச் செய்ய மாணவர்களை தூண்டிவிட்டு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது.
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.