பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தியாவில் இருந்து 100 பேரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் வெற்றிடங்கள் நிலவும் உயர்தர கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய துறைகளுக்கே இந்திய ஆசிரியர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ் ஆசிரியர் தோட்டப் பாடசாலைகளில் கற்பிப்பதற்கு விரும்பாமையின் காரணமாக தோட்டப் பாடசாலை மாணவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்ககொடுத்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
நுவரெலியா, பதுளை, பண்டாரவளை ஆகிய பிரதேசங்களுக்கு இந்திய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். குறித்த வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரையில் இந்திய ஆசிரியர்கள் தோட்டப்பாடசாலைகளில் கற்பிப்பர் என்றும் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.