அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று (27) அடையாள வேலைநிறுத்தமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய தமக்கான சலுகைகள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு வலியுறுத்தி நாட்டிலுள்ள 15 அரச பல்கலைக்கழகங்களைச் சார்ந்த சுமார் 15,000 கல்விசாரா ஊழியர்கள் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழகம் என்பவற்றின் கல்விசாரா ஊழியர்கள் முழுமையான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையினால் அப்பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் முற்றாக முடங்கிப்போயுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பின் (The University Trade Union Joint Federation – UTUJF) பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தில் புதிதாக இணைக்கப்பட்ட மாணவர்கள் இன்று தமது வகுப்பறைக் கற்றலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இப்பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழக வரலாற்றில் முதற்தடவையாக புதிய மாணவர்கள் கற்றல் மற்றும் நிருவாக செயற்பாடுகளுக்காக பெற்றோருடன் வந்துள்ள தருணத்திலேயே பணிப்பகிஷ்கரிப்பை சந்தித்துள்ளனர் என்று சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்
இதேவேளை, கொழும்பு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று மாலை நடைபெறவுள்ள சந்திப்பையடுத்து நாளை போராட்டத்தில் இணைந்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.