சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சமூக மட்டத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் பெண் பிரமுகர்களிடம் வேலைத்தளம் நேர்காணல் மேற்கொண்டு வருகின்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினரும், சங்கத்தின் மகளிர் அணித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் மத்திய குழு உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு எம்முடன் இணைந்து கொண்டார்.
கேள்வி – உங்கள் பணியிடத்தில் மற்றும் துறைசார் பணிகளில் பெண்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பில் பெண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் என்ன?
பதில் – பெண்களின் பணியிடங்களில் பால்நிலை ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான பிரச்சினைகள் பொதுவாகவே உள்ளன. அதுமட்டுமன்றி, நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளும் உள்ளன. உடல்ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு அப்பால், ஆண்களால் உள ரீதியிலான துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக வார்த்தைகளால் துன்புறுத்தல் என்பன பரவலாகவே இடம்பெறுகின்றது. என்னைப் பொருத்தவரை பெண் என்ற அடிப்படையில், நான் ஒதுக்குதலுக்;கும், புறக்கணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டேன்.
கேள்வி – இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தீர்கள்?
பதில் – எனது தந்தையின் வழிகாட்டலும், எனது தன்னம்பிக்கையும் இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு காரணமாக அமைந்தன. குறிப்பாக ஏனைய தரப்பினரின் மூலமாக வரும் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்து செயற்படுவதில் அதிக அக்கறையுடன் இருந்தேன். அதன் காரணமாக தேவையற்ற பிரச்சினைகளுக்குள் உள்ளாவதை தவிர்த்து முன்னோக்கி செல்லும் சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டேன்.
கேள்வி – இந்தத் துறைக்குள் நீங்கள் வருவதற்கு காரணமாய் அமைந்த பின்னணி பற்றி சுருக்கமாக குறிப்பிட முடியுமா?
பதில் – தந்தையின் வழிகாட்டல் எனது இந்த அரசியல் பயணத்துக்கு அடித்தளமாக அமைந்தது. பாடசாலை காலத்திலும், அதன் பின்னரும் மேடைப் பேச்சு உட்பட சமூக நிகழ்வுகளில் அதிக ஆர்வத்துடன் இருந்ததால், தொழிற்சங்கமொன்றில் மகளிர் தரப்பினரை வலுப்படுத்தும் ஒரு அதிகாரி என்ற நிலைக்கு எனது தன்னம்பிக்கையால் முன்னேறினேன். எனினும், அந்த தொழிற்சங்கத்தில் சில புறக்கணிப்புகள் காரணமாக தொடர்ந்தும் பணியை தொடர முடியாத நிலையில், அதிலிருந்து வெளியேறினேன்.
பின்னர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் 2013 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, மாகாண சபைக்குத் தெரிவானேன். அரசியல் பிரவேசத்தின்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்;கினேன். உயிர் அச்சுறுத்தலைக்கூட ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்கொள்ள நேரிட்டது. இப்படியான பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு, எனது தன்னம்பிக்கை மூலமாக முன்னேறினேன்.
கேள்வி – நீங்கள் இந்தத் துறையில் முகங்கொடுத்த பிரச்சினைகள் அல்லது நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் இருக்குமாயின், அதைப்பற்றி சுருக்;கமாக கூற முடியுமா?
பதில் – ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் முன்னோக்கி பயணிப்பது என்பது சவாலான விடயமாகும். எனினும், அவற்றைக் கடந்தே பெண்கள் முன்னோக்கி பயணிக்கின்றனர். குடும்பம், தொழில் என இரண்டையும் கவனித்துக்கொண்டே பெண்கள் தமது வாழ்வை முன்னெடுக்கன்றனர்.
அரசியலைப்பொறுத்தவரை நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. குறிப்பாக பெண்களுக்கான திட்டங்களை செயற்படுத்தும்போது அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினைகள் ஏற்படும். நிதி ஒதுக்கீடுகளை பெண்களின் அபிவிருத்தித் தி;ட்டங்களுக்கு முழுமையாக செலவிட முடியாது. ஏனெனில், பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பல்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தனியே பெண்களுககான திட்டத்தை மாத்திரம் முன்னெடுக்க முடியாது. இவற்றுக்கு அப்பால் பெண்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது பொருளாதார ரீதியான பிரச்சினைகள் ஏற்படும். எனவே, இதுபோன்ற பிரச்சினைகளுடனேயே அரசியல் பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
கேள்வி – மாற்றத்திற்கான உங்களின் பரிந்துரைகள் என்ன?
பதில் – மலையகத்தைப் பொறுத்தவரை தொழிற்சங்க ரீதியாக பெண்களின் தன்னார்வம் அதிகரிக்கப்பட வேண்;டும். அதற்காக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டு வருகின்றோம். தொழிற்சங்கம் என்றால் என்ன? அந்தத் துறையில் பயணிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறித்து விளக்கமளித்தல் மற்றும் மகளிருக்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் முதலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மலையகப் பெண்கள் சமூகத்துக்கு அஞ்சி வாழும் நிலைமையே பரவலாக காணப்படுகிறது. ஆண்துணை அவசியம் என்ற எண்ணங்களின் காரணமாக அவர்கள் மலையகத்துக்குள்ளேயே முடக்கப்படுகின்றனர். பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு ஆலோசனை வழங்க பிரதேச செயலக காரியாலயங்களில் ஆற்றுப்படுத்தலுக்கான தனியான பெண் அதிகாரிகள் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை மாற்ற ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்ககளிப்பு செலுத்த வேண்டும். தன்னம்பிக்கையின் மூலமே பெண்கள் முன்னேற முடியும். அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதா இதனால், பெண்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்படாததால், அந்தப் பிரச்சினைகள் விரிவடைந்து செல்கின்றன. எனவே, இதனைத் தீர்க்க அரசியல் ரீதியாக பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்.
– எனக் கூறுகிறார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினரும், சங்கத்தின் மகளிர் அணித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் மத்திய குழு உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு.