நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாக வடக்கு தமிழர்கள் கடனாளிகள் ஆகியுள்ளதுடன், அவர்களின் குடும்ப கட்டமைப்பிலும் பாரிய பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுவதாக மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றிய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் மகாலஷ்மி கிருஷாந்தன் கூறுகிறார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வேலைத்தளம் மேற்கொண்ட நேர்காணலில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
கேள்வி – உங்கள் பணியிடத்தில் மற்றும் துறைசார் பணிகளில் பெண்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பில் பெண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் என்ன?
பதில் – எமது மாவட்டமானது யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இங்கு பெண்களும், சிறுவர்களும்தான் யுத்தத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் முன்னர் ஆண்களின் பொருளாதார நிலைமையில்தான் தங்கியிருந்தனர். ஆனால், தற்போது அந்தப் பெண்களின் கணவன், பிள்ளைகள் உயிரிழந்து, காணாமல்போய், தடுப்பு முகாமில் இருக்கின்றனர். இதன் காரணமாக பெண்கள் பொருளாதாரக் கொண்டுநடத்த வேண்டியவர்களாகவும், பொருளாதார ரீதியாக முன்னேறவேண்டிய ஒரு கட்டாய நிலைமைக்கும் தள்ளபப்பட்டுள்ளனர்.
எனவே, இதுவரைக்காலமும், தமது குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் வாழ்ந்து வந்த பெண்கள் இன்று அதனைக் கடந்து ஒவ்வொரு அரச திணைக்களங்கள், பாடசாலைகள், மருத்துவமனை என சேவை இடங்களில் பணியாற்றுகின்றனர். இந்த இடங்களில் பெண்கள் என்ற அடிப்படையில் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். பணியிடங்களுக்கு செல்லும்போது. பேருந்துகளில் பாலியல் துன்புறுத்தல்களை அனுபவிக்கின்றனர். பெண்கள் தமது பணியிடங்கள் மற்றும் சேவைநாடும் இடங்களில் பால்நிலை சமத்துவம் இல்லை.
வட மாகாணத்தைப் பொருத்தவரை கணவனை இழந்த மற்றும் ஆண்துணையற்ற பெண்கள் குடும்பங்களுக்கு த் தலைமைத்துவம் ஏற்கும் நிலைமை அதிகளவில் காணப்படுகிறது. இந்த நிலையில்அவர்கள் மீதான பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் அதிகரித்துள்ளன. காணாமல்போனோரின் உறவுகள் தமது உறவினர்களைத் தேடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு முடிவின்றி போராடி வருகின்றனர்.
முன்னர் பெண்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இடமாக அவர்களின் வீடுகள் இருந்தன. ஆனால், இன்று வீடுகளே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இடமாகியுள்ளது. அண்மைய நாட்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறை சம்பவங்கள் இதற்கு உதாரணமாகும். அதுமட்மன்றி, பாடசாலை செல்லும் பெண்களும் பாலியல் வன்முறை எனும் அவலத்துக்கு முகங்கொடுத்தனர். இவ்வாறான பெண்களின் துன்பமான நிலைமை இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
கேள்வி – இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீள்வ்தற்கு நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?
பதில் – இந்தப் பிரச்;சினைகளிலிருந்து மீள்வதற்கு கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் அவசியமாகும். பெண்களின் பிரச்சினைகள் சொல்வதற்கு இன்றுவரை ஒரு தளம் இல்லை. இந்த நிலையில், மாவட்ட ரீதியாக பெண்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, கலாசார ரீதியிலான பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்புவதும், அது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதைத் தவிர்த்து. பிரச்சினைகள் வராமல் தடுப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றோம். அதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றோம்.
கேள்வி – இந்தத் துறைக்குள் நீங்கள் வருவதற்கு காரணமாய் அமைந்த பின்னணி பற்றி சுருக்கமாக குறிப்பிட முடியுமா?
பதில் – போரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்தான் நான். இந்த நிலையில், முகாம்களில் வாழ்ந்து, இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து பல்வேறு இடர்களை சந்தித்துள்ளேன். யுத்தம் காரணமாக கற்றல் நடவடிக்கைகள்கூட பாதிப்படைந்தது.
இந்த நிலையில், முகாம்களில் பணியாற்றி, பல்வேறு இறப்புகளையும், இழப்புகளையும் சந்தித்தோம். இந்தப் பின்னணியின் அடிப்படையில் அன்றாடம் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், இந்தத் துறைக்குள் வந்து, பணியை தொடரும் நிலை உள்ளது.
கேள்வி – நீங்கள் அல்லது உங்கள் துறைசார் பணியாளர்கள் இந்தத் துறையில் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் அல்லது நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுகின்ற நிலைமைகள் இருக்குமாயின், அதைப்பற்றி சுருக்கமாக கூற முடியுமா?
பதில் – வட மாகாணத்;தை எடுத்துக்கொண்டால். நிதி நிறுவனங்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் பிரச்சினைகள் பாரியளவில் உள்ளன. கடன் தொல்லைகளால் அவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குடும்ப நிலைமைகள் மாற்றப்பட்டதுடன். குடும்ப கட்டமைப்பும் இந்த நிதி நிறுவனங்களால், சீர்குலைக்கபப்பட்டுள்ளன. தற்கொலை என்ற முடிக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அடுத்ததாக அரசாங்க சேவை வழங்கும் இடங்களில் பெண் அதிகாரிகள் இல்லாமை பெண்களுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்துணை இல்லாத பெண்கள், தமக்கு ஏற்படும் பிரச்சினை குறித்த காவல் நிலையத்தில் முறைபப்பாடு செய்யக்கூட முடியாத நிலைமை உள்ளது. அவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படையாக எடுத்துக்கூற பெண் அதிகாரிகள் இல்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இந்தப் பெண்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
அதுமட்டுமன்றி. பாதக்கப்பட்ட பெண் ஒருவர் தமக்கு உளவள ஆலோசனையை நாடும்போது, சம்பந்தப்பட்ட அரச பணியிடங்கள் மற்றும் ஏனைய இடங்களில் ஆற்றுப்படுத்தநர்களாக ஆண்களே உள்ளனர். இதன்போது, பெண்கள் தமது பிரச்சினைகளை சொல்ல முடியாத நிலைமை ஏற்படுகின்றது.
ஆண்துணையற்ற – கணவனை இழந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதுமட்டுமன்றி, அவர்கள் சுதந்திரமாக செயற்படுபதற்கு சமூகமே தடையை ஏற்படுத்துகின்றது. ஆறு மணிக்கு மேல் அந்தப் பெண்கள் வெளியே சென்றுவர முடியாது. அவர்களின் நடத்தை தொடர்பில் தவறான பார்வை சமூத்தில் ஏற்படுத்தப்படும்.
இப்படியாக பால்நிலை சமத்துவமின்மை மற்றும் பாலியல் தொந்தரவுகள், சமூக கட்டமைப்பின் கட்டுப்பாடுகள் என்பன அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதில் தடையாக உள்ளது.
கேள்வி – மாற்றத்திற்கான உங்களின் பரிந்துரைகள் என்ன?
பதில் – மாற்றம் என்பது தனி மனித மாற்றமாக முதலில் இருக்கவேண்டும். சமூக விழுமியங்கள், மூடக் கொள்கைகள் என்பன கலைப்பட வேண்டும். ஏனெனில், இன்று பெண்களே பெண்களை குறைகூறும் நிலைமை காணப்படுகிறது.பெண்களின் சுதந்திரம் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின், தீர்மானம் எடுக்கும் இடங்களில் பெண்களின் பங்கு அதிகளவில் இருக்க வேண்டும். குறிப்பாக அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக கணவனை இழந்த ஆண்துணையற்ற பெணிகளின் வாழ்வையும் – பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அரசியமைப்பு ரீதியிலான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் – பெண்கள் இன்று போராட்டத்திலேயே தமது காலத்தைக் கடத்துகின்றனர். அவற்றுக்கு அப்பால், காணிப் பிரச்சினை என்பனவற்றைத் தீர்க்க வேண்டும்.
அத்துடன், வன்முறைகளை எதிர்க்கும் இறுக்கமான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். அரசியல் ரீதியிலான கட்டமைப்புகள், பொறிமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும். அதனூடாகவே பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை காண முடியும் என்றார் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றிய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் மகாலஷ்மி கிருஷாந்தன்.