ஆணாதிக்க சமூக கட்டமைப்பிலுள்ள தடைகளைத் தகர்த்து வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையும் – உறுதியும் பெண்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். இதுவே பெண்கள் தமது வாழ்வியலில் முன்னோக்கிச் செல்வதற்கான முதல் படிநிலையாகும் என பெண்நிலை செயற்பாட்டாளர் அனுஷானி ஆலோசனை வழங்குகிறார்.
இவர் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின்; இணைப்பாளரும், அடையாளம் கொள்கைக்கான ஆய்வு நிலையத்தின் ஆய்வாளரும், பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளருமாவார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் பிரமுகர்களிடம் வேலைத்தளம் மேற்கொள்ளும் நேர்காணலில் அவர் இணைந்து கொள்கிறார்.
கேள்வி – பெண்ணியல் ரீதியான செயற்பாட்டு துறைக்குள் நீங்கள் எவ்வாறு பிரவேசித்தீர்கள்? இதற்கு பின்னணி காரணங்கள் எதுவும் இருக்கின்றதா?
பதில் – ஒரு ஆணாதிக்க சமூக கட்டமைப்பில் வாழும் பெண் என்ற அடிப்படையில், என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களை புரிந்துகொள்ளவும், எனக்கு ஏற்பாட்ட பாதிப்புகள் மற்றும் வன்முறைகள் என்பனவற்றிலிருந்து நான் எவ்வாறு மீள்வது? என்று அதற்கான விடைகளை தேட முற்பட்டபோதுதான் ஒரு பெண்நிலைவாதியாக என்னை நான் உருவாக்கிக் கொண்டேன். அதிலிருந்து பெண்கள் ரீதியான செயற்பாட்டு அமைப்புக்களில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன்.
பொது இடங்கள், பொது போக்குவரத்துகள் என்பனவற்றில் பெண்கள் முகங்கொடுக்கும் பாலியல் தொந்தரவுகள், உளவியல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் தாக்கங்கள், நாங்கள் எதைச் செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்று கூறுவது, ஒரு விடயத்தை செயற்படுத்த முயற்சிக்கும்போது, எவ்விதமான ஊக்கத்தையும் வழங்காமல் எங்களை மட்டுப்படுத்துவது, நாங்கள் என்ன படிக்கவேண்டும்? எவ்வாறான ஆடைகளை அணிய வேண்டும்? யாருடன் பழக வேண்டும் என்று எங்களது ஒவ்வொரு முடிவுகளிலும் யாராவது ஒருவருடைய தலையீடு இருக்கின்றது.
இதுபோன்ற பாதிப்புகள் என்னை சற்று அதிகமாக தாக்கியது. இவைகளை புரிந்துக்கொள்ள முயற்சிக்கும்போது, இந்தத் தடைகளை தாண்டி என்னுடைய பாதையை எனது விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளும் சிந்தனை ஏற்பட்டபோதுதான் நான் பெண்ணியம் தொடர்பான கற்றலை ஆரம்பித்தேன். அதிலிருந்து தோற்றம் பெற்றதே இந்த செயல்வாதமாகும். தற்போது இந்தத் துறையில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக எனது பணி தொடர்கிறது.
கேள்வி – உங்கள் பிரதேசத்தில் மற்றும் துறைசார் பணிகளில் பெண்களின் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பில் பெண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் என்ன?
பதில் – குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை துஷ்பிரயோகம், சிறுமிகள் மீதான துஷ்பிரயோகம், உளவியல் ரீதியிலான வன்முறைகள், வார்த்தை ரீதியிலான வன்முறைகள் என பெண்கள் தொடர்பான வன்முறைகள் நீண்டு செல்கின்றன.
இவற்றுக்கு அப்பால், காணாமல்ஆக்கப்பட்டோர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முன்னாள் போராகளின் பிரச்சினைகள், மாற்று ஆற்றல் கொண்டோரின் பிரச்சினைகள், நலிவடைந்த பெண்களின் தலைமைத்துவ குடும்பங்கள், தொழில் தேடும் பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
கேள்வி – நீங்கள் அல்லது உங்கள் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்நோக்கும், பிரசச்சினைகள்? அதாவது பெண்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு அப்பால், உங்கள் பிரதேசத்தைச் சார்ந்த பெண்கள் விசேடமாக ஏதாவது பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
பதில் – அண்மையில் இடம்பெறும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றுதான் நுண்கடன் திட்டம் தொடர்பான பிரச்சினையாகும். இது அனைவரும் அறிந்த விடயமாகும். எனினும், இந்த நுண்கடன் திட்டமானது தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணின் குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது அறியாத விடயமாக உள்ளது.
நுண்கடன்களை வழங்கி, பின்னர் அவற்றை மீள அறவிடுவதற்காக பெண் தலைமைத்துவ குடும்பங்களை நாடிச் செல்லும் சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் (பெரும்பாலானோர்) சில இடங்களில் அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவது, சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவது போன்ற சம்பவங்களை நீங்கள் அண்மையில் அறிந்திருக்கக்கூடும். இதற்கு எதிராக அண்மையில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
மேலோட்டமாக பார்க்கும்போது இந்தப் பிரச்சினையின் தாக்கம் பெரிதாக தெரிவதில்லை. ஆனால், கிராமப்புறங்களுக்குச் சென்று மக்களுடன் உரையாடும்போதுதான், அவர்களின் அன்றாட வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கின்றது? எவ்வளவு ஆழமாக அது ஊடுருவி இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
அடுத்ததாக பாலியல் இலஞ்சம் என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. இலங்கையைப் பொருத்தவரை ஏதாவது ஒரு விடயத்தைச் செய்ய வேண்டுமாயின், ஏதாவது ஒரு நிறுவனத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். அல்லது எவரிடமாவது கடிதம் பெறப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான், குறித்த வேலையை செய்து முடிக்கக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறான இடங்களில் சேவையை நாடிச் செல்லும் பெண்களிடம், சேவை வழங்குநர்களால் பாலியல் இலஞ்சம் கேட்கப்படுகின்றது. ஏற்கனவே, நலிவடைந்த பெண்கள், தாம் சேவை நாடிச்செல்லும் இடங்களில், அரசாங்க உத்தியோகத்தர்களாலும் ஏனைய சேவை வழங்குநர்களாலும் குறித்த பெண்கள் திரும்பவும் பாதிப்புக்கு உட்படுத்தவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது பரவலாக இடம்பெறும் விடயமாக இருக்கின்றபோதும், அதிகளவில் பேசப்படாத விடயமாக உள்ளது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் பதவி – அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்பில் பிரச்சினைகளை எழுப்புவது கடினமான விடயம் என்பதால், அது கவனத்தில் எடுக்கப்படாத விடயமாக உள்ளது.
கேள்வி – பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் அதிகளவில் இருக்கின்றன. முரண்பாட்டு நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கான நிலைமைகளை ஏற்படுத்த அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரோ நடவடிக்கை எடுக்கவில்லையா?
பதில்; – இதில் இரண்டு விடயங்கள் உள்ளன. முரண்பாட்டு நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கு உதவி வழங்குதல் என்ற பெயரில் அராங்கமும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தது. அரச சார்பற்ற நிறுவனங்களும் நடவடிக்கைகளை எடுத்திருந்தன.
ஆனால், உண்மையாக நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய திட்டங்களை குறித்த தரப்பினர் நடைமுறைப்படுத்தியிருந்தால். எட்டு ஆண்டுகளின் பின்னர் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. சமூகத்தின் தேவை – பெண்களின் தேவை அறிந்து உதவித்திட்டங்கள் பகிரப்படவில்லை.
உதாரணமாக ஒரு கிராமத்தில் பாதிக்கப்பட்ட அல்லது வாழ்வாதார தேவையுடைய அனைத்து பெண்களுக்கும் தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. இதனூடாக அனைவரும் தையல் துறையில் ஈடுபட்டால், எவருக்கும் வருமானம் கிடைக்காது. அப்படியானால், அவர்கள் பொருளாதார ரீதியில் எவ்வாறு முன்னேற்றம் காண்பார்கள்?
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுள் ஒரு தரப்பினருக்கு மாத்திரமே தொடர்ந்து உதவிகள் சென்றடைந்த நிலைமைகளும் உள்ளன.
பெண்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவையறிந்து வழங்கப்படவில்லை. இவையே தாக்கத்திற்கு காரணமாய் அமைந்தது.
எனவே, பெண்களின் தேவைப்பாடு என்ன? குறித்த பகுதியில் நிலைத்து நிற்கக்கூடிய தொழிவாய்ப்பு என்ன? என்பதை ஆராய்ந்து உதவித் திட்ங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்களின் நிலைமையையும் – தேவையையும் – விருப்பத்தையும் கேட்டறியாமல், உதவி வழங்குநர் தமது எண்ணத்தின் அடிப்படையிலான உதவிகளை வழங்குவார்களாயின், அவை எந்தளவுக்கு நன்மை பயக்கக்கூடியது என்பதை குறிப்பிட முடியாது. பெண்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் உதவிகளே நீடித்து – நிலைத்து நிற்கக்கூடியதாய் அமையும்.
கைத்தொழில்கள் என்ற அடிப்படையில் பார்த்தால், முன்னர் காலங்களில் வன்னி கடற்கரைப் பகுதியில் மீன்கள் நண்டுகள் பதப்படுத்தும் இடமிருந்ததாக மக்கள் கூறுவார்கள். அதற்கான குளிரூட்டல் – பதப்படுத்தல் (ஐஸ்) வசதிகொண்ட தொழிற்சாலைகள் மற்றும் கல் உடைக்கும் தொழிற்சாலைகளும் இருந்தாகவும் மக்கள் கூறுவார்கள்.
இந்த நிலையில், குறித்த பிரதேசங்களில் அந்த தொழிற்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
உதாரணமாக கைத்தொழில்களை ஊக்குவித்தல் உள்ளடங்களாக அவர்களுக்கு பொருத்தமான – அவர்கள் ஆர்வம் செலுத்தக்கூடிய அவர்களின் பங்களிப்பும், சொந்த உழைப்பை பயன்படுத்தக்கூடிய தொழில்வாய்ப்புக்கள் மற்றும் உதவித் திட்டங்களை வழங்கினால், அது நீடித்து நிற்கக்கூடியதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்பத்துவதாகவும இருக்கும்.
கேள்வி – சமூகத்தின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நீங்கள் முன்வைக்கும் யோசனைகள் என்ன?
பதில் – இந்த நுண்கடன் திட்டத்தைப் பொருத்தவரை எம்மால் தீர்வை முன்வைக்க முடியுமா என்பதும், அது எந்தளவுக்கு சாத்தியமானது என்பதும் எமக்கும் தெரியவில்லை. எனினும், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பனவற்றை சார்ந்த தரப்பினரிடம் நாம் இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியுள்ளோம்.
ஒரு ஒழுங்கு விதியை உருவாக்குமாறும், எல்லா தனியார் நிறுவனங்களும் இந்த நுண்கடன் திட்டத்தை வழங்க முடியும் என்ற நிலைமையை தவிர்த்து, ஒரு கட்டமைக்கப்பட்ட முறையில் குறைந்த வட்டி வீதம் என்ற அடிப்படையில் நுண்கடன் திட்டத்தை முன்னெடுக்க யோசனை முன்வைத்துள்ளோம்.
இதற்கு அடுத்தபடியாக பாலியல் தொந்தரவுகள் என்ற விடயத்தில், பாலியல் இலஞ்சம் என்பது ஒரு குற்றமாக சட்டத்தில் இல்லை. வேறு விடயங்களின் ஊடாக இதனை ஒரு குற்றமாகக் கருதலாமே தவிர, பாலியல் இலஞ்சம் கோரப்படுவதற்கு எதிராக நேரடியான சட்டம் இல்லை.
எனவே, இதனை கொள்கை அடிப்படையில் எவ்வாறு உள்வாங்கலாம் என்ற உரையாடல்களிலும் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.
இவை அனைத்தையும் சட்டரீதியான நோக்கத்தில் நாம் பார்க்கலாம். ஆனால், அடிப்படையில் இருக்கும் பிரச்சினைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், இந்த விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
மக்களின் மனநிலை, பதவிகளில் உள்ளவர்கள் பெண்களை, நலிவடைந்த பெண்களை தாங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் – துஷ்பிரயோகம் செய்யலாம் என்ற மனப்பாங்கை கொண்டிருக்கும்வரை எந்தவொரு சட்டதத்தை ஏற்படுத்தினாலும், அடிப்படை விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் எவ்விதமான மாற்றங்களைக் கொண்டுவருவதிலும் பயனில்லை. இதேவேளை, சட்டங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என்பது முக்கியமான விடயமாகும்.
கேள்வி – மாற்றத்திற்கான உங்களின் பரிந்துரைகள் என்ன?
பதில் – எல்லா பெண்களும் ஒரே மாதியானவர்கள் அல்ல என்பது அடிப்படையான விடயமாகும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தேவை – ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கும். ஆனால், பெண்களை அவர்களுக்குத் தேவையான துறைகளில், அவர்களுக்குத் தேவையான வழிகளில் வலுப்படுத்துதல் நாம் செய்யக்கூடிய விடயமாகும்.
இந்தச் சமூக கட்டமைப்பிலிருந்து வெளியே வருவதற்கு பெண்களுக்கு தன்னம்பிக்கை – உறுதி என்பன முக்கிய தேவையாகும். சிலருக்கு கல்வியால், சிலருக்கு தொழிற்துறையால் இந்த தன்னம்பிக்கையும் – உறுதியும் கிடைக்கும்.
தம்மால் முடியும். இந்தக் கட்டமைப்பை உடைத்து வாழ முடியும் என்ற தன்னக்கையும் உறுதிப்பாடு ஏற்படும்போது இதுபோன்ற விடயங்கள்; இயல்பாகவே இடம்பெறத் தொடங்கிவிடும். இதுவே பெண்களை வலுப்படுத்துவது முதலாவது படிநிலையாகும்.
அடுத்ததாக தகவல் பரிமாற்றம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள பெண்களை சென்றடையக்கூடிய வகையில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள், நலிவடைந்த பெண்கள், தாம் எங்கு போகலாம்? எவ்வான உதவிகளைப் பெறலாம் என்ற தகவல்கள் பெண்களுக்கு கிடைக்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.
இவற்றுக்கு மேலதிகமாக முன்னதாக குறிப்பிட்ட சில பரிந்துரைகள் யோனைகள் என்பன நடைமுறைப்படுத்துப்பட்டு, கட்டமைப்பு ரீதியாக மாற்றங்கள ஏற்படுத்தப்பட்டால், ஆணாதிக்க சமூகத்திலிருந்து விடுபட்டு பெண்கள் சுதந்திரமாக வாழும் நிலைமை ஏற்படும்.
– என்பது பெண்ணியல் செயற்பாட்டாளரான அனுஷானியின் கருத்தாக உள்ளது.