அரச சேவைக்கு புதிதாக ஐந்தாயிரம் பேரை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று (14) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
அரச முகாமைத்துவ சேவை தரம் மூன்றுக்கு மேற்கூறப்பட்ட ஐந்தாயிரம் பேரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் கடந்த ஆண்டு (2017) நடத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையில் மாவட்ட மட்டங்களில் அதிக புள்ளிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.
இலங்கையில் தற்போது சுமார் 14 இலட்சம் அரச ஊழியர்கள் சேவையில் உள்ளனர். நாட்டின் சனத்தொகையில் 15 பேருக்கு ஒரு அரச ஊழியர் என்றவகையில் சேவையில் உள்ளனர் என அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அடையாளங்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் அரச முகாமைத்துவ சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி, அவ்வமைச்சின் மேலதிக செயலாளர்களான பி.எம்.என் அபேகுணவர்தன ( அரச நிருவாகம்), இந்து ரத்நாயக்க (உள்நிருவாகம்), மாலா பஸ்நாயக்க (ஆய்வு) ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் கே.டீ.பீ.எம். கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.