பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு விரைவில் 3800 ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா வாய்மூல வினாவுக்கான நேரத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தோட்டப் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி மட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர் வளத்தை அதிகரிப்பதற்காக விரைவில் 3800 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் பாடசாலை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் போதுமான நிலப்பரப்பை வழங்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தோட்டப்பாடசாலைகளின் கல்வி நிலையை மேம்படுத்த இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது. பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் என்ற ரீதியில் 250 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளோம். ஆய்வுகூடங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.