அரசியல் பழிவாங்கலுடனான நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திட்டமிட்ட அடிப்படையில் நாளைய தினம் (04) பணிப்புறக்கப்பில் ஈடுபட உள்ளதாக கல்வியைப் பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
அந்த ஒன்றியத்தின் உறுப்பினரும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ஜோசப் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
4ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும், கல்வியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள், கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், தேசிய கல்வியல் நிறுவகம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் உள்ள கல்வி நிர்வாக சேவையாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பணிப்புக்கணிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாவிட்டால், தமது நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ள உள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சுகயீன விடுமுறை பெற்று 2,40,000 ஆசிரியர்கள், 15,000 அதிபர்கள், 2,500 கல்வி நிர்வாக அதிகாரிகள் மற்றும் 1,500 ஆசிரியர் கல்விச்சேவை அதிகாரிகள் என 2,60,000 பேர் வரலாற்றில் முதற்தடவையாக இணைந்து இப்போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இதனால் 19 கல்வியியற் கல்லூரிகள், 97 வலய கல்வி அலுவலகங்கள், 9 மாகாண கல்விக் காரியாலயங்கள், 315 கோட்டக் கல்விக் காரியாலயங்கள், மற்றும் 10,194 பாடசாலைகள் என்பவற்றின் சேவைகள் நாளை (04) முற்றாக முடக்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ‘மவ்பிம’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளாகியுள்ள 1200 பேருக்கு கல்வி நிர்வாகச் சேவை, அதிபர் சேவை பதவியுயர்வுகளை வழங்க தீர்மானித்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளது ஆசிரியர் சங்கம். மேலும் அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளாகியவர்களுக்கு பதவியுயர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக வீட்டில் இருக்கும் சிலருக்கும் பதவியுயர்வு வழங்குமளவுக்கு இன்று அரசியல் சார்பு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, இவ்விடயம் தொடர்பில் 18 ஆசிரியர் சங்கங்கள் இவ்விடயம் தொடர்பில் கல்விச் செயலாளரை தௌிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இத்தன்னிச்சையான செயலை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிடின் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க அனைத்து தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாகவும் சங்கச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.