பொது மக்களுக்கு சேவை வழங்குவதற்காக நியமனம் பெற்று அரச உத்தியோகத்தர்கள் உரிய வகையில் செயற்படாவிட்டால் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்த்ர சமரவீர தெரிவித்துள்ளார்.
தனது அமைச்சுக்கு பொதுமக்கள் கூறுவதை செவிமடுக்கக்கூடிய ஊழியர்களே தேவை. மக்களுக்கு தரமான சேவையை வழங்குவதே எமது முதன்மை நோக்கமாகும். அதனை சரிவர செய்யாதவர்கள் அமைச்சில் இருந்து மாற்றப்படுவார்கள் என்று பிரதி மற்றும் உதவி தொழிலாளர் ஆணையாளர்களுக்காக இவ்வார ஆரம்பத்தில் நடத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொழில் அமைச்சு அல்லது தொழில் திணைக்களத்திற்கு தோட்டத் தொழிலாளர்கள் வருகைத்தருகிறார்கள். விரைவில் அவர்களுக்கான நடமாடும் சேவைகளை மத்திய வங்கியின் உதவியுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரித்துள்ளது. ஓய்வூதிய கொடுப்பனவுகளை இன்னும் 25 வருடங்களுக்குக்கூட முன்னெடுத்துச்செல்ல முடியாத நிலைக்கு ஓய்வூதியம் வழங்கும் நாடுகள் தள்ளப்படும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. ஓய்வூதிய வயதையடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பே இதற்கான பிரதான காரணமாகும்.
கால தாமதமாவதற்கு முன்னர் அதற்கான மாற்று வழிகளை ஆரம்பிப்பது அவசியம். அதற்கான கலந்துரையாடல்களை தொழிற்சங்கங்களுடன் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம். எனினும் மாற்று வழிகள் குறித்து நம்பிக்கையற்ற தன்மையையே தொழிற்சங்கங்கள் வௌியிட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சின் செயலாளர் நிமால் சரணதிஸ்ஸ, தொழில் ஆணையாளர் எ. விமலவீர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Daily News/ வேலைத்தளம்