
கூட்டு ஒப்பந்த விடயத்தில் முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம்கட்ட தொழிற்சங்கமட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் நேற்று (13) இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்ட கமிட்டி என்பன இதில் கலந்துகொண்டன.
இதன்போது, சம்பள உயர்வு அவசியம் என அனைத்து தொழிற்சங்கங்களம் ஒருமித்த கருத்தை முன்வைத்ததாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
எனினும், சம்பளத் தொகை இதன்போது நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும், அது குறித்து தொடச்சியாக இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் முடிவெடுப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள உப குழுவின் அறிக்கை நேற்றைய பேச்சுவார்த்தையில் கையளிக்கப்பட்டுள்ளது.
அதில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார, பாதுகாப்பு மற்றும் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து அதில் விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்டு ஒப்பந்தம் தொடர்பான தொழிற்சங்கங்களுக்கு இடையிலான அடுத்தகட்ட சந்திப்பை எதிர்வரும் 20ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.