அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள், கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றிருந்தால் உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள கல்வியமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,
கடந்த அரசாங்கம் ஆசிரியர்களுக்கான நியமனங்களை தமக்கேற்றவாறு மேற்கொண்டபோது அமைதிகாத்த ஆசிரியர் தொழிற் சங்கங்கங்கள், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு அரசியல் தலையீடுகளின்றி கல்வி நிர்வாக சேவைகளினூடாக நியமனங்களை வழங்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
அவ்வாறு பொருத்தமற்றவர்களுக்கு நியனமனங்கள் வழங்கப்பட்டுள்ளது என கருதினால் தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் முறையீடு செய்து நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
தொழிற்சங்கங்களின் பணிநிறுத்த போராட்டத்தை ஒருபோதும் தொழிற்சங்கத்தின் பிரச்சினையாக கருத முடியாது. தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் சதித்திட்டமாவே கருதவேண்டும். இவ்வாறான சதித் திட்டங்களுக்கு பொது மக்கள் ஒருபோதும் ஏமாறக்கூடாது.
எனவே, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் நாளைமறுதினம் நடத்த திட்டமிருக்கும் நாடளாவிய வேலைநிறுத்தம் குறுகிய அரசியல் நோக்கத்துடனானது. அதற்கு ஆசிரியர்களும் பெற்றோரும் மாணவ சமுதாயமும் எந்த விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.