கட்டிட நிர்மாணம், விடுதிகள் மற்றும் சுற்றுலா, தாதியதுறை மற்றும் மோட்டார் வானகத்துறை முதலான நான்கு துறைகளிலும் 25,000 இற்கும் அதிகமான தொழில்வாய்ப்புகள் உள்ளதாக தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகார சபையான நைட்டா தெரிவித்துள்ளது.
எனினும், பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறை நிலவுவதாகவும் அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், பயிற்சிகளை வழங்கி பயிற்றப்பட்டவர்களுக்கு தேசிய தொழிற்துறை பயிற்சியில் 3 அல்லது 4 ஆம் தரத்திலான சான்றிதழை வழங்கும் வேலைத்திட்டத்தை அந்த நிறுவனம் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆய்வு, திறன்கள் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் மலைநாட்டு மரபுரிமைகள் தொடர்பான அமைச்சர் சரத் அமுனுகமவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நைட்டா நிறுவனத்தின் தலைவர் சாரங்க அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆட்சேர்க்கப்படும் பயிற்சியாளர்கள் இரண்டு மாத அடிப்படை பயிற்சிகளின் பின்னர், தொழில் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவதுடன், அதன் இறுதியில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் பயிலுநர்களுக்கு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கற்கை நெறிக்கான முதற்கட்ட நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், அதற்காக பயிலுநர்கள் தற்போது நைட்டாவின் மாவட்ட ரீதியிலான மத்திய நிலையங்களின் ஊடாக ஆட்சேர்க்கப்படுவதாகவும் நைட்டா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பயிலுநராக இந்தக் கற்கைநெறியில் இணைய விரும்புபவர்கள், 1951 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
உயர்தரத்தின் பின்னர் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளவர்களுக்காக இந்தத் திட்டம் தொடர்ச்;சியாக முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த கற்றல் நடவடிக்கைகள் மூலம எதிர்காலத்தில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்திற்காகவும் இந்த பயிற்சி நடவடிக்கையை தொடர்ந்து முன்கொண்டுசெல்வதாகவும் நைட்டா நிறுவனத்தின் தலைவர் சாரங்க அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
வழிமூலம்: லங்காதீப