2,500 கிராம சேவகர்களை உள்ளீர்ப்பதற்கான இரண்டாம்கட்ட ஆட்சேர்ப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 370 புதிய கிராம சேவகர்களுக்கான நியமனம் வழங்கப்பட உள்ளது. அத்துடன், கிராம சேவகர்களை ஆட்சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 104 கிராம சேவகர்களுககு இன்றைய தினம் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட உள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிராம சேவர்களை ஆட்சேர்ப்பதற்கான பரீட்சையின் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, எழுத்து மூலமான மற்றும் நேர்முகத் தேர்வு என்ற இரண்டிலும் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட 1,664 பேருக்கு முதல் கட்டத்தின் கீழ் நியமனம் வழங்கப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு என்பனவற்றின் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையிலேயே இரண்டாம் கட்ட ஆட்சேர்ப்பு இடம்பெறும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.