அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக அரச சேவைக்கும், அரச ஊழியர்களுக்கும் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரச தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க யோசனை தெரிவிக்கப்பட்டிந்ததாகவும், தற்போது அந்;த வரவு – செலவுத் திட்ட யோசனை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கூட்டமைப்பின் செயலாளர் அஜித் திலக்கரட்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் புதிய சம்பள ஆணைக்குழு ஒன்றும் நிறுவப்பட்டதுடன், அதன் அறிக்கையை ஒக்டோபர் 28ஆம் திகதி கையளிக்க தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் அஜித் திலகரட்ண தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அறிக்கை சமர்ப்பிப்பு பிற்போடப்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையின்கீழ்; அரச ஊழியர்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் திலகரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, அரச சேவையின் இயக்கத்திற்காக வருடாந்தம் நிதி அவசியம் என்றும், அந்த நிதி, வரவு – செலவுத் திட்டத்தில் உரிய சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த வரவு – செலவுத் திட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அடுத்த வருடத்தில் (2019) அரச சேவையை முன்கொண்டு செல்வதற்காக உரிய முறையில், உரிய தினத்தில் நிதி கிடைக்குமா என்பது தொடர்பில் கேள்வி நிலவுவதாகவும் அரச தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் அஜித் திலக்கரட்ன தெரிவித்துள்ளார்.
வழிமூலம்: மவ்பிம