
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து எதிர்வரும் நிதி அமைச்சின் செயலாளரினால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை – செத்சிறிபாயவில் உள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஆராய தாம் உட்பட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முன்னாள் தொழில் அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த குழுவின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், சம்பள விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளரும் தற்;போது அவதானம் செலுத்தி வருவதனால், அது குறித்த அவரின் அறிவிப்பும் எதிர்வரும் தினங்களில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையும் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளார்களின் சம்பள விடயத்திற்கு சாதகமான தீர்வொன்று எட்டப்படும் என்றும் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
வேலைத்தளம்