பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலை மரங்களை மீள்நடுகை செய்வதன் மூலம் விளைத்திறனை அதிகரிக்க முடியும் என்று, இலங்கை தேயிலை சபையின் தலைவர் லுசில் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,
இலங்கைத் தேயிலைக்கு உலக சந்தையில் அதிக கேள்வி இருப்பதுடன், சிறந்த விலையும் நிலவுகிறது.
பெருந்தோட்ட யாக்கங்களின் கீழ் இருக்கின்ற தேயிலைத் தோட்டங்களின் தேயிலை மரங்கள் பழமையானவை.
அதனால் தேயிலை கொழுந்துகளை பறிப்பதற்கு தொழிலாளர்கள் சிரமப்படுகிறார்கள்.
அவற்றை அகற்றி புதிய தேயிலை மரங்களை உருவாக்க வேண்டும்.
அதன்மூலம் இலங்கையின் வருடாந்த தேயிலை உற்பத்தியை 300 மில்லியன் கிலோவில் இருந்து 400 மில்லியன் கிலோ வரையில் அதிகரிக்கலாம்.
தங்களுக்கு கிடைக்கின்ற லாபம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தினால்தான் பெருந்தோட்ட யாக்கங்கள் புதிய தேயிலை மரங்களை நட தயங்குகின்றன.
இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தியில் 25 சதவீதமான பங்களிப்பையே பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் உள்ள தோட்டங்கள் வழங்குகின்றன.
எஞ்சிய 75 சதவீதமானவை சிறுதேயிலை உற்பத்தியாளர்களால் பூர்த்தி செய்யப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், 2019ம் ஆண்டு முதல் பெருந்தோட்டங்களிலும், சிறுதோட்டங்களிலும் புதிய தேயிலை மரங்களை நடுகை செய்வதற்கான பாரிய வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை தேயிலை சபை முன்னெடுக்கவுள்ளதாகவும் இலங்கை தேயிலை சபையின் தலைவர் லுசில் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
வழிமூலம்: சிலோன்ருடே