இன்று இடம்பெறவுள்ள 2019ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் இந்தப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றவுள்ளதாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் சமூகப் பிரச்சினையாக மேல் எழுந்துள்ள நிலையில் தொழில் அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு உள்ளிட்ட அரசாங்க தரப்பு தமது தலையீட்டினை மேற்கொண்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என இந்த பிரேரணையின் ஊடாக வலியுறுத்தப்படவுள்ளது.
இதேநேரம், பெருந்தோட்டத்துறை நிர்வாக முறைமையை மறுசீரமைக்க கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றையும் எதிர்காலத்தில் கொண்டுவரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.