வட மாகாணத்தில் 491 பேரை தொண்டர் ஆசிரியர்களாக இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு 3 தரம் ஐஐ ற்கு உள்வாங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் என்பனவற்றுக்கான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தும் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தை பூர்த்திசெய்தும், 3 வருடம் தொடர்ச்சியாக சேவையாற்றியும் இருத்தல் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 30 வருட கால யுத்தம் காரணமாக குறித்த தரப்பினரை உள்வாங்கும்போது வயது எல்லை 50ற்கு மேற்படாமலும், 3 வருடங்கள் தொடர்ச்சியாக சேவையாற்றும் பொழுது அதில் நலன்புரி நிலையங்களிலும் இருந்த காலப்பகுதிகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும் 55மூ வரவினை பூர்த்தி செய்திருக்க வேண்டுமெனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
491 பேரை உள்வாங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதானது வடமாகாண அபிவிருத்தியில் இளைஞர்களுக்கு அரசதுறை வேலைவாய்ப்பை வழங்குவதற்கான வாய்ப்பாக அமைவதாக தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு தரமான ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.