சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்களுக்கு முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில், திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் தயா கமகே இரத்துச் செய்துள்ளார்.
திணைக்களத்திற்கு பணியாளர்களை உள்ளீர்க்கும்போது, தற்போதுள்ள வேதனம் குறைவடையும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பணிப்பாளரினால் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சமுர்த்தி அதிகார சபையிலிருந்து சமுர்த்தி திணைக்களத்தில் இணைந்த அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமாயின், அதிகார சபையின் கீழிருந்தபோது பெற்றுக்கொள்ளப்பட்ட மேலதிக கொடுப்பனவு மற்றும் ஊழியர் சேமலாப நிதியை அரசாங்கத்திற்கு மீள செலுத்த வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி அதிகார சபை, கடந்த 2014 ஆம் ஆண்டு திணைக்கsமயப்படுத்தப்பட்டது. இதன்போது சமுர்த்தி அதிகார சபையாக இருந்த காலகட்டத்தில் கிடைக்கப்பெற்ற ஊழியர் சேமலாப நிதி மற்றும் மேலதிக கொடுப்பனவு என்பனவற்றைப் பெற்றுக்கொள்ள ஊழியர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டது.
8,000 சமுர்த்தி ஊழியர்கள் இந்த ஊழியர் சேமலாப நிதி மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் என்பனவற்றைப் பெற்றுக்கொண்டு 2014 ஆம் ஆண்டு முதல் சமுர்த்தி திணைக்களத்தின் கீழ் மீண்டும் அரச சேவைக்குள் நிரந்தரமாக உள்ளீர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில், திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் தயா கமகே இரத்துச் செய்துள்ளார்.
இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டமை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊழியர்களுடன் கலந்துரையாடி, சட்ட திட்டங்களுக்கு அமைய தன்னால் வழங்கக் கூடிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.