உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் நோக்கில் ‘சஞ்சாரக்க பொட்டோ’ வட்டியில்லா கடன் வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வட்டியில்லாத சிறு அளவிலான வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையில் இக்கடன் வழங்கப்படவுள்ளதாக நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சர் தெரிவித்தார்.
மூன்று வருடங்களில் செலுத்தக்கூடிய வகையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான தொகை கடனாக வழங்கப்படவுள்ளது. இக்கடனுக்கான நூறு சதவீத வட்டியை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். கடனை கிராம அபிவிருத்தி வங்கியினூடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
இதேபோல், தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைக்கும் இவ்வாறான ஒரு தீர்வு முன்வைக்கப்படும். ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலின் பின்னர் மக்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த அஞ்சுகின்றனர். எனவே அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல், மே மாத தவணைப்பணத்தை செலுத்துவதற்கான தவணைக்காலத்தை வழங்குமாறு உரிய நிறுவனங்களுக்கு சுற்றுநிரூபம் அனுப்பியுள்ளோம் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, வௌியரங்குகளில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் நடத்தும் இசைக்கலைஞர்களுக்கும் கடனுதவி வழங்குமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார். வெசக் தோரணைகளை செய்வோரும் பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவர்களுக்கும் இவ்வாறான நிவாரண கடன்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்