திஸ்ஸமஹராம, நெதிகம்வில கிராமத்தில் போஷாக்கின்மை காரணமாக குழந்தை உயிரிழந்தமைக்கு தொடர்ந்தும் குடும்ப நல மருத்துவ மாதின் பொறுப்பின்மையே காரணம் என்று பல அரசியல்வாதிகள் கூறுவார்களாயின் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரச குடும்ப நல மாதுக்கள் சங்கத்தின் தலைவி தேவிக்கா கொடித்துவக்கு எச்சரித்துள்ளார்.
நேற்று (20 ஹிங்குரக்கொட பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், திஸ்ஸமஹராம குடும்ப சுகாதார நல அலுவலகத்தின் கீழ் உள்ள நெதிகம்வில கிராமத்தில் வசிக்கும் கயந்தி இந்திக்கா என்ற தாயின் 11 மாத குழந்தை இறந்தமைக்கு அங்கு சேவையாற்றும் குடும்பநல மாதுதான் காரணம் என்று பல அரசியல்வாதிகள் குற்றம்சாட்டுகின்றனர். தாம் பெயரெடுக்கவே அவர்கள் இவ்வாறு குற்றஞ்சாட்டுகின்றனர்.
தாய் கர்ப்பம் தரித்த காலம் தொடக்கம் குழந்தை பிறந்த பிறக்கும் குடும்பநல மருத்துவ மாது அவருடைய கடமையை சரிவர செய்துள்ளார். ஆனால் சில அரசியல்வாதிகள் தமக்கு நற்பெயரை ஏற்படுத்திக்கொள்வதற்கு குடும்பநல மருத்துவ மாதின் மீதும் சுகாதார வைத்திய அதிகாரி மீதும் தொடர்ந்தும் பழி சுமத்துகின்றனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் 6 அரச அதிகாரகள் உள்ளனர். அந்த குழந்தைக்கும் குடும்பத்திற்கும் தேவையான உணவை பெற்றுக்கொடுப்பது அல்லது பெறுவதற்கான வழியை ஏற்படுத்திக்கொடுப்பது அவர்களின் கடமை.
குறித்த குழந்தையின் மரணம் தொடர்பில் சரியான முறையில் விசாரணைகள் செய்யாது எம்மீது குற்றஞ்சாட்டுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் எமது சுகாதார தரப்பில் அனைத்து பொறுப்புக்களையும் சரிவர செய்துள்ளோம். இருந்தும் எம்மீது குற்றஞ்சுமத்துவதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடருமானால் எதிர்வரும் திங்கட்கிழமை (24) நாடு தழுவிய வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தேவிக்கா கொடித்துவக்கு எச்சரித்துள்ளார்.