2016 மற்றும் 2017 உயர்தர பெறுபேறுகள் பிரகாரம் கல்வியற் கல்லூரிகளுக்கு செப்டெம்பர் முதல் வாரத்தில் ஆசிரிய பயிலுனர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அத்தோடு ஏற்கனவே கல்வியற் கல்லூரிகளில் பாடநெறிகளை நிறைவு செய்த 4000 பேருக்கு ஒக்டோபரில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டவுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது :
தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்படும் மூன்றாண்டு கால போதனா கல்வி பாடநெறியை பயில்வதற்காக 2016 மற்றும் 2017 உயர்தர பெறுபேறுகளின் பிரகாரம் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.
இதன்பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள 19 கல்வியற் கல்லூரிகளுக்கு 4000 மாணவர்கள் வீதம் இரு குழுக்கள் (8000 மாணவர்கள்) சிங்களம் , தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் ஊடாக நடத்தப்படும் பாடநெறிகளுக்காக செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இதன்படி 2019.01.25 இலக்கம் 2108 சுற்றுநிருபத்தின் பிரகாரம் கல்வியற் கல்லூரி பாடநெறிகளுக்காக 68,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதுடன், அவர்களில் 28,000 பேர் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன் 19 கல்வியற் கல்லூரிகளில் பாடநெறிகளை நிறைவு செய்த 4000 பேருக்கு ஒக்டோபர் மாதமளவில் ஆசிரிய நியமனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு நான்கு ஆண்டுகளில் 20,064 பேர் ஆசிரிய சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி 2015 இல் 5866 பேரும், 2016 இல் 5018 பேரும், 2017 இல் 5162 பேரும் , 2018 இல் 2186 பேரும் 2019 ஆம் ஆண்டில் இதுவரை 715 பேரும் ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நன்றி- வீரகேசரி/ வேலைத்தளம்