மட்டக்களப்பு மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக தமது தொழில் உரிமையினை வலிறுத்தி நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
அரசாங்கத்தினால் 16ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நியமனங்களில் வெளிவாரி பட்டதாரிகள் எவரும் உள்வாங்கப்படாததை கண்டித்தும் வெளிவாரி பட்டதாரிகளை உள்வாங்க கோரியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் முற்போக்கு தமிழர் அமைப்பு என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு உடனடியாக நியமனம் வழங்கு,அரசே வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணிக்காதே,அரசே வெளிவாரி பட்டதாரிகளையும் கவனத்தில்கொள்,வெளிவாரி பட்டம் என்ன வீதியிலா பெறப்பட்டது,வெளிவாரி பட்டதாரிகளை வீதியில் இறக்காதே,எங்களையும் வேலைவாய்ப்பில் உள்வாங்கு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
உள்வாரி பட்டதாரிகள்போன்று மிகவும் கஸ்டப்பட்டே தாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்துள்ள நிலையில் தங்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளமையானது மிகவும் கவலைக்குரியது என இங்கு வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தர்.
கடந்த காலத்தில் வீதிகளில் இறங்கி அதிகமாக வெளிவாரி பட்டதாரிகளே போராடியபோதிலும் தங்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாகவும் வெளிவாரி பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெளிவாரி பட்டமானது வேலைக்கு தகுதியில்லையென்று சொன்னால் பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டப்படிப்பினை நிறுத்தவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆரசாங்கம் வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான அழுத்ததினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் இங்கு பட்டதாரிகள் முன்வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் உட்பட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டன.