இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னர், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு பெறுவதற்கான நிலைமைகள் அங்கு உருவாகும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கப்பற்துறை கிராமத்தில் இன்று புதிய வீடமைப்பு கிராமத்திற்கான அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பல்வேறு அபிவிருத்திகளை காணவுள்ளது. கிண்ணியா உப்பாறு கங்கை பகுதியில் கைத்தொழில் பேட்டை அமையவுள்ளது இதனால் சுமார் 3000 இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளது.
இது போன்று கொக்கிளாய், நாயாறு பகுதிகளிலும் புல்மோட்டை இல்மனைட் கூட்டுத்தாபனத்தின் கிளை விஸ்தரிப்பு ஊடாக பல அபிவிருத்திகளை கைத்தொழில் என்கிற வரையரைக்குள் மீள்குடியேற்ற வர்த்தக அமைச்சு ஊடாக நடை முறைப்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.
வேலையில்லா வெளிவாரி பட்டாரிகளுக்கு மூன்று வாரங்களுக்குள் தீர்வு வழங்கப்படவுள்ளதுடன், விரைவில் 8000 வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது என்றும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வேலையில்லா வெளிவாரி பட்டதாரிகளுக்கும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ஆகியோர்களுக்குமிடையில் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக் கிழமை கிண்ணியா அல் அதான் பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றுள்ளது.
அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் கலந்து கொண்ட இச் சந்திப்பில் தங்களது வெளிவாரி பட்டங்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டும் தொடர்பாக பிரதியமைச்சரிடத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கருத்து தெரிவிக்கையில்
அண்மையில் உள்வாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது வழங்கப்பட்ட 16800 உள்வாரி பட்டதாரிகளுக்குள் 800 பட்டதாரிகள் வெளிவாரி பட்டதாரிகள் மிகுதியான பட்டதாரிகள் விரைவில் உள்வாங்கப்படவுள்ளார்கள். இதற்கான ஆரம்ப கட்டமாக 8000 நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, செயலாளர் வீ.சிவஞானசோதி ஆகியோர்களை சந்தித்து இது விடயமாக கூறியுள்ளேன்.
அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதும் வெளிவாரி என்ற பாரபட்சமின்றி அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதில் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எச்.ஜெஸீர்,கிண்ணியா வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் நிஹ்மத்துள்ளா உட்பட பல நூற்றுக்கும் மேற்பட்ட வெளிவாரி வேலையற்ற பட்டதாரிகளும் கலந்து கொண்டார்கள்.