தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் மத்திய மாகாணத்தில் தமிழ்க் கல்வி சமூகத்துக்கு நடக்கும் அவலங்களையும் அக்கிரமங்களையும் பற்றி பேசுவதற்கு நாதியில்லை எனும் போது இந்த பிரதேசங்களுக்கு தமிழ்ப் பிரதிநிதிகள் தேவைதானா என்ற கேள்வியும் அனைவரினதும் மனதில் எழுவதை தடுக்க முடியாதுள்ளது.
25 ஆண்டு காலமாக மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சை தக்க வைத்திருப்பது அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே என்பது இப்போது அனைவருக்கும் புரிந்துள்ளது.
இல்லாவிடின் தமிழ்க் கல்விக்கு காலங்காலமாக நேர்ந்து வரும் அவலங்கள் என்றோ தீர்க்கப்பட்டிருக்கும். தமிழ்க் கல்வி அமைச்சு என்பது பெயரளவில் மட்டுமே, அங்கு பெரும்பான்மையினரின் அதிகாரங்களே எடுபடும் என்பதற்கு மத்திய மாகாண கல்வித்திணைக்களத்தின் செயற்பாடுகளே சான்று பகிர்கின்றன.
மொழிபெயர்க்கப்பட்ட சிங்கள வினாத்தாள்கள்
இம்முறை இடம்பெற்ற தவணை பரீட்சை வினாத்தாள்களில் பல்வேறு குழப்பங்களும் தவறுகளும் இடம்பெற்றுள்ளமையானது சகல பாடசாலைகளுக்கும் வெற்றிகரமாக பரீட்சைகளை முன்னெடுப்பதில் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தோற்றுவித்துள்ளது. சகல பாடசாலைகளிலும் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புகளுக்கு அனைத்து பாடங்களின் வினாத்தாள்களையும் தயாரிக்கும் முழுப் பொறுப்பினையும் வழமை போலவே இம்முறையும் மத்திய மாகாண கல்வித் திணைக்களம் ஏற்றுக்கொண்டிருந்தது. அதில் தமிழ் மற்றும் சைவசமய வினாத்தாள்கள் மாத்திரமே தமிழில் தயாரிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஏனைய பாடங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட வினாத்தாள்களாக காணப்பட்டன.
அதன்படி தமிழுக்கான மொழிபெயர்ப்பின் போது பல்வேறு சொற்பிழைகள் காணப்பட்டன. அது மாத்திரமன்று சில பரீட்சை வினாத்தாள்கள் பகுதி ஒன்றில் ஒரு சில வினாக்கள் அச்சிடப்படாமலும் பல்தேர்வு வினாக்களுக்கான விடைகள் அச்சிடப்படாமலும் காணப்பட்டன. அத்தோடு தரம் 11 இற்கான புவியியல் பாடத்தில் வழங்கப்பட்டிருந்த தேசப்படங்களில் சிங்கள மொழி பயன்பாடு கூடுதலாக காணப்பட்டிருந்ததாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அதேவேளை தரம் 6 லிருந்து தரம் 10 வரையான குடியுரிமை கல்வி மற்றும் புவியியல் பாடங்களில் பல்வேறு பிழைகள் காணப்பட்டதன் காரணமாகவும் ஆசிரியர்களும் மாணவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு இம்முறை முகங்கொடுத்தனர்.
சிங்கள மொழியில் மாத்திரம்
இதேபோல் சித்திர பாடத்திற்காக வழங்கப்பட்டிருந்த விடைத்தாள்கள் அனைத்தும் சிங்கள மொழியிலேயே வழங்கப்பட்டிருந்ததாக குறித்த பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதேவேளை 10 ஆம் தரத்திற்கான தொடர்பாடலும் ஊடகமும் என்ற பாடத்திற்கான பகுதி 1 வினாத்தாள் எந்த ஒரு பாடசாலைகளுக்கும் அனுப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மேலும் தரம் 8 கணித பாட வினாத்தாளில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து ஒரு வினா எடுக்கப்பட்டு இருந்தமையினால் மாணவர்கள் குறித்த வினாவிற்கான விடை அளிப்பதில் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அத்துடன் இப்பாடத்தில் பகுதி ஒன்றில் வழங்கப்பட்டிருந்த பல்தேர்வு வினாக்களில் ஒரு சில வினாக்களுக்கான விடைகளில் குழப்பங்கள் காணப்பட்டதோடு, வினாக்களிலும் தவறுகள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு தரம் 6 இற்கான ஆங்கில பாட வினாக்களுக்கு பொருத்தமற்ற விடைகளே வழங்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை, புவியியல் பாடத்திற்கான விடைத்தாளானது குறித்த தரத்திற்கு மட்டுமன்றி பாடத்திற்கும் பொருத்தமற்றதாகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதே போன்றே உயர்தரப் பிரிவிற்கான வினாத்தாள்களை மதிப்பிடுவதற்கு தேவையான விடைத்தாள்கள் முறையாக அனுப்பிவைக்கப் பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு சகல பாடங்களுக்குமான விடைத்தாள்களும் புள்ளியிடும் வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு வலயக்கல்வி காரியாலயங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டன. அதில் முதலாவதாக அனுப்பப்பட்ட இறுவட்டில் பெரும்பாலான விடைத்தாள்கள் சிங்கள மொழியில் மாத்திரம் காணப்பட்டதை சுட்டிக்காட்டியதையடுத்து, இரண்டாவதாக மேலும் ஒரு இறுவட்டு அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் அதிலும் ஒரு சில பாடங்கள் சிங்கள மொழியிலேயே தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
குறைவான எண்ணிக்கையில் வினாத்தாள்கள் மேலும் ஒவ்வொரு பாடசாலையும் தமக்கு தேவையான மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விண்ணப்பப்படிவங்களை மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் அனுப்பியிருந்த போதிலும் அங்கிருந்து பாடசாலைகளுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே ஒரு சில பாட வினாத்தாள்கள் அனுப்பப்பட்டிருந்தமையினால் தமக்குத் தேவையான வினாத்தாள்களை போட்டோ பிரதி எடுப்பதற்கான மேலதிகமான செலவுகளை பாடசாலை நிர்வாகங்கள் பொறுப்பேற்று நடத்தியமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஒவ்வொரு பாடசாலையும் தமது பாடசாலைக்கு தேவையான வினாத்தாள்களுக்கு ஏற்படும் மொத்த செலவினை ஏற்கனவே மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்கு செலுத்தி இருக்கும் நிலையில் பற்றாக்குறையான வினாத்தாள்களை போட்டோ பிரதி எடுப்பதற்காக மேலதிகமான செலவுகளை ஏற்கவேண்டிய நிலைக்கு பல பாடசாலைகள் இம்முறை தள்ளப்பட்டன.
மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் தமிழ் கல்வி அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இருக்கின்ற நிலையில் சிங்கள மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட பிறகு குறித்த தமிழ் மொழியிலான வினாப் பத்திரங்களை அச்சிடுவதற்கு முன்னர் சரி பிழை பார்த்திருப்பார்களாயின் இவ்வாறான அவலநிலை தோன்றியிருக்காது என பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இது இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன இதற்கான நிரந்தரத் தீர்வினை இதுவரை எந்த ஒரு தரப்பினரும் முன்வைக்கவில்லை என்பது வேதனைக்குரிய விடயமே.
தமிழ்க் கல்வி அமைச்சு என்ன செய்தது?
தவணைப் பரீட்சை என்பது ஒருவகையில் மாணவர்களுக்கு இடையே போட்டித் தன்மையை உருவாக்கும் ஒரு வேலைத்திட்டமாகும். அந்த வகையில் பரீட்சை வினாத்தாள்கள் தரம் அற்ற நிலையில் இருக்கும் போது மாணவர்களும் பல்வேறு குழப்பநிலையிலேயே பரீட்சைக்கு முகம் கொடுத்திருப்பது உறுதி. இவ்வாறான நிலைமையில் வெற்றிகரமான பரீட்சைகளை எவ்வாறு நடத்த முடியும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. கடந்த 25 வருட காலமாக மத்திய மாகாணத்தில் தமிழ்க் கல்வி அமைச்சு ஒன்று இருந்து வந்துள்ளது. அப்போதிலிருந்தே இவ்வாறான நிலைமை நீடித்த வண்ணமே காணப்படுகின்றது. வெறுமனே தமிழ்க் கல்வி அமைச்சு வேண்டும் என குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்வி அதிகாரிகள் தமிழ்க் கல்வி சமூகம் முகங்கொடுக்கும் இவ்வாறான பாரதூரமான விவகாரங்கள் பற்றி கண்டு கொள்வதேயில்லை.
தமிழ்க் கல்வி அமைச்சுப்பதவியை தக்க வைத்துக்கொண்டு பாடசாலைகளில் தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைத்து மலையக கட்சிகளினதும் நோக்கமாக உள்ளது.
அத்தோடு மத்திய மாகாணத்தில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் என்ற பதவி பெரும்பான்மை இனத்தவருக்கு இருக்கும் அதேநேரத்தில் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் தமிழ் பிரிவிற்கான செயலாளர் என பல்வேறு பதவிகளில் தமிழர்களே இருந்து வருகின்றனர். இவர்கள் வெறும் பொம்மைகளாகவே அங்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தான் நிதர்சன உண்மை. இல்லாவிடின் ஒவ்வொரு வருடமும் இந்த பிரச்சினைகள் தொடருவதற்கு சந்தர்ப்பங்களே இல்லை.
தனியார் கல்வி நிறுவனங்கள் , தனியார் அமைப்புகள் தவணைப் பரீட்சை வினாத்தாள்களை பொறுப்பேற்ற போது பொறுப்புணர்வுடன் மிகச் சிறப்பாக பரீட்சை வினாத்தாள்களை தயாரித்ததோடு புள்ளியிடும் மதிப்பீட்டு தாள்களை கூட மிக துல்லியமாக தயாரித்து விநியோகித்து வந்தன.
அவ்வாறான நிறுவனங்களுக்கு தடைவிதிக்கும் அதே வகையிலேயே தற்போது மத்திய மாகாண கல்வித் திணைக்களமானது இச்செயற்பாட்டினை முன்னெடுத்திருக்கின்றது. ஆனால் இப்போது நடப்பதே வேறு. இதேவேளை மத்திய மாகாணத்தில் உள்ள சகல வலயக் கல்விப்பணிப்பாளர்களும் தமது நிர்வாகத்தின் கீழ் வரும் சகல பாடசாலைகளுக்கும் உதவிக் கல்வி பணிப்பாளர்களையும் ஆசிரிய ஆலோசகர்களையும் தினமும் பரீட்சைக் கடமைகளில் மேற்பார்வையிடுவதற்காக அனுப்பியிருந்ததோடு சிறந்த முறையில் பரீட்சை கடமைகளை முன்னெடுப்பதற்கு ஒரு உந்துதலாக இருந்தனர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டல் அவசியம்.
ஆனால் பதவிகளுக்கும் ஆசனங்களுக்கும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகளோ மலையக கல்வி விடயத்தில் எந்த வித அக்கறையுமின்றி செயற்படுகின்றனர் என்பது இவ்வாறான சம்பவங்களின் மூலம் நிரூபணமாகியுள்ளது. பொதுப் பரீட்சைகளின் போது மத்திய மாகாணம் பின்னடைவை கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது என்பதையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
நன்றி – வீரகேசரி