கல்விசாரா ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப்போராட்டம் காரணமாக பல்கலைக்கழக கட்டமைப்பு முழுவதுமாக செயலிழந்துள்ளமையினால் அரசாங்கம் உடனடியாக தீர்வு காண முன்வரவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் முற்றாக முடங்கியுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைள் நியாயமானவை. கடந்த 10 நாட்களாக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளுக்காகவே அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே குறித்த பிரச்சினைகள் தொடர்பில் சுமார் ஒரு வருட காலமாக உரிய அதிகாரிகளுடன் பலசுற்று பேச்சுக்களையும் நடத்தியுள்ளனர். அவர்களுடைய பிரச்சினைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும் தீர்வுகளை முன்வைக்கவில்லை.
பொதுவாக அரச ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் உட்பட பல கொடுப்பனவுகள் உள்ளபோதிலும் கல்விசாரா ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுமே உள்ளது. கடந்த காலங்களில் அரச ஊழியர்களை விடவும் கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் அதிகமாயிருந்தது. பிற்காலத்தில் அவை குறைக்கப்பட்டு சம்பள ஒழுங்குப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. கல்விசாரா ஊழியர்களின் சேவை மிக அவசியமானது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாமல் அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.