ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டினை நீக்குவதற்கான இடைக்கால சம்பள அளவுத்திட்டத்தை அமுல்படுத்தும் வரை – அதனை இணைந்த கொடுப்பனவாக வழங்குவதற்கான சுற்றுநிருபம் எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படாவிடின் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தமாகவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
இடைக்கால சம்பள அளவுத்திட்டத்தை அமுல்படுத்தும் வரை – அதனை இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக புதிய கல்வியமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் – இதனை ஆரம்ப தற்காலிக தீர்வாக ஏற்க தொழிற்சங்கங்களும் இணங்கியுள்ளன.
இணக்கம் காணப்பட்ட இந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதிக்குள் சுற்றுநிருபம் வெளியிடப்படவேண்டும்.
அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து -ஆசிரியர் அதிபர் தொழிற் சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
கடந்த வருடம் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு வலியுறுத்தி மார்ச் 13 மற்றும் செப்ரெம்பர் 26,27 திகதிகளில் தொழிற்சங்கப் போராட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்காரணமாக – கடந்த மைத்திரி -ரணில் அரசாங்கத்தினால் சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய உபகுழு அமைக்கப்பட்டது. ஒக்டோபர் 29 ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் உபகுழுவுக்கும் இடையே நடந்த சந்திப்பை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் திகதி – ஆசிரியர் அதிபர் சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாக்கி <closed service> அமைச்சரவை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதன்காரணமாக – ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களும் கல்வியமைச்சும் இணைந்து முன்மொழிந்த சம்பளதிட்டத்தை ஆராய்ந்த ரனுகே ஆணைக்குழு -பரிந்துரைத்திருந்த சம்பளதிட்டத்தை நடைமுறைப்படுத்தும்வரை இடைக்கால சம்பள திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக – அப்போதைய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை – நடைமுறைப்படுத்த சம்பள ஆணைக்குழுவின் அனுமதிபெறவேண்டியிருந்த நிலையில் – நவம்பர் 14 இல் சம்பள ஆணைக்குழு கூடிய நிலையிலும் – முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் – நவம்பர் 16 இன் பின்னர் – தற்போதைய புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற நிலையில் – புதிய கல்வியமைச்சராக பொறுப்பேற்ற டலஸ் அழகப்பெருமாவுடன் 17.12.2019 ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்திருந்தனர்.
இதன்போது – இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறியவேண்டியிருப்பதாக கூறி புதிய கல்வி அமைச்சர் கால அவகாசம் கேட்டிருந்தார்.
அதனடிப்படையில் – ஜனவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பதில் வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக கோரி கடிதம் அனுப்பியுமிருந்தது.
இதனடிப்படையில் – கடந்த 20 ஆம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது,
ஆசிரியர் அதிபர் சேவையை ஏனைய சேவைகளோடு சேர்க்காமல் அகப்படுத்தப்பட்ட சேவையாக்கினால் சம்பளம் அதிகரிக்க முடியும் என சம்பள ஆணைக்குழுவும் தற்போது தெரிவித்துள்ளது.
எனவே – தற்போதைய அரசாங்கமும் – டிசம்பர் மாதம் ஆசிரியர் அதிபர் சேவையை அகப்படுத்தப்பட்ட <closed service> சேவையாக்கி அமைச்சரவையில் தீர்மானித்துள்ள நிலையில் – இடைக்கால சம்பள அளவுத்திட்டத்தை அமுல்படுத்தும் வரை – அதனை இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் தெரிவித்தார்.
இதனை தற்காலிக தீர்வாக ஏற்க தொழிற்சங்கங்களும் இணங்கியுள்ளன. ஆயினும் – இணக்கம் காணப்பட்ட இந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதிக்குள் சுற்றுநிருபம் வெளியிடப்படவேண்டும்.
அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து ஆசிரியர் அதிபர் தொழிற் சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.