அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமையை அர்ப்பணிப்போடு செய்ய முன்வராதவரை பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கான விமோசனம் கிடைக்காமலே போய்விடலாம் என்று கவலையுடன் தெரிவிப்பதாக மாவட்ட மேலதிக செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்வாண்மை உளநல ஆற்றுப்படுத்துநர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட மேலதிக செயலாளர் சுதர்ஷினி,
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அரச உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை இருந்தபோதிலும்கூட மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் அதிகளவான அரச உத்தியோகத்தர்கள் மேலதிகமாக உள்ளார்கள். இதனை இந்த மாவட்டத்தைக் மீள் கட்டியெழுப்பக் கூடிய ஒரு சாதகமான விடயமாகவும் பார்க்க முடியும்.
மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலிடம் என்று குறிப்பிடுகின்றோம்.
அதேவேளை, தற்கொலை செய்துகொள்ளும் விடயத்திலும் இந்த மாவட்டம் முன்னணியில் இருப்பதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றதை நான் கவலையோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஊழல் மோசடிகளிலும் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் இந்த நிலைமை காணப்படுகின்றது.
இவ்வாறாக எதிர்மறையான சூழலில் இந்த மாவட்டத்தில் பணிபுரிகின்ற அரசாங்க உத்தியோகத்தர்களும் சமூக மட்டத்தில் களப்பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுமாகச் சேர்ந்து யுத்தத்தினாலும் இயற்கை இடர்களினாலும் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மட்டக்களப்பு சமுதாயத்தை மீண்டெழ வைக்க வேண்டும். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது.
ஒரு அரச உத்தியோகத்தர் தனது தொழிலை நேசிக்கின்றவரானால் அவர் மக்களுக்கான சேவையை மன விருப்பத்தோடு செய்ய முன்வரவேண்டும்.
அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமையை அர்ப்பணிப்போடு செய்ய முன்வராதவரை பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கான விமோசனம் கிடைக்காமலே போய்விடலாம் என்று கவலையுடன் தெரிவிப்பதாக மாவட்ட மேலதிக செயலாளர் சுதர்ஷினி கூறியுள்ளார்.