ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி நேற்றிரவு (03) வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கட்டளைப்படி ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரட்னவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் தொழிற்சங்கம் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, பயணிகள் அல்லது பண்டங்களுக்கான அனைத்துப் பொதுப்போக்குவரத்துச் சேவைகள், இந்த சேவையை வினைத்திறனுடன் தடையற்ற முறையில் நடத்திச் செல்வதற்கு அவசியமான தொடருந்து போக்குவரத்து, ரயில் மற்றும் ரயில் பாதைகளின் பராமரிப்பு மற்றும் உரிய பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு தேவையான உரிய சமிக்ஞைக் கட்டமைப்பு மற்றும் வழிநடத்தல்கள், அனுமதி சீட்டுக்களை வழங்குதல் உள்ளிட்ட ரயில் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து விதமான சேவைகள் விஷேட சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.