
தாய்மை என்பது பெண்களுக்கான வரப்பிரசாதம். தாய்க்கும் குழந்தைக்குமான உறவு குறித்து புதிதாக விளக்கங்கள் தேவையில்லையென நினைக்கிறேன். புதிதாக பிறந்த குழந்தைக்கு தாயின் அரவணைப்பும் அன்பும் மிக மிக அவசியம். ஆனால் இன்றைய சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்கிறதா? பெண்கள் தொழில் செய்வதில் பேரார்வத்துடன் உள்ள இன்றைய காலகட்டத்தில் தாயின் அரவணைப்பும் அன்பும் பிறந்த குழந்தைக்கு உரிய முறையில் கிடைக்கிறதா? இலங்கையில் சட்டங்கள் அதற்கு எந்தளவுக்கு சட்டரீதியான வாய்ப்புக்களை வழங்கியுள்ளது? இவற்றைக்குறித்த விபரங்களை பணிபுரியும் பெண்களுக்கு வழங்குவதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.
பணிபுரியும் பெண்கள் தாய்மையடையும் போது தாயினதும் குழந்தையினதும் பாதுகாப்பு பல சட்டங்களினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிறது இலங்கை தொழில் திணைக்களம்.
1939 இல 32 மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம்
இலங்கைக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே பெண்களுக்கான மகப்பேற்று விடுமுறை வழங்குவதன் முக்கியத்துவம் அடையாளங்காணப்பட்டுள்ளது. 1939ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இச்சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய 2018 ஜூன் மாதம் திருந்தச் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2018 இல 15 மகப்பேற்று நன்மைகள் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச்சட்டமானது தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கானது.
கடைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கான சட்டமானது 1954 இல 19 கடைகள் மற்றும் அலுவலக (சேவைகள் மற்றும் ஊதிய ஒழுங்குப்படுத்தல்) சட்டத்தின் 18 சரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இது தவிர அரச சேவையை நோக்குவோமானால் அரச ஊழியராக பணியாற்றும் பெண் ஒருவர் தாய்மைப் பேற்றை அடைந்தால் அவருக்கான விடுமுறை தொடர்பான விளக்கங்கள் அரச நிர்வாக சுற்றுநிருபம் இலக்கம் 4/2005 இன் கீழ் உள்ளது.
1939 இல 32 மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டம் நோக்குகள்
- ஊழியரின் மகப்பேற்றுக்கான விடுமுறை
- மகப்பேற்று விடுமுறைக்காலத்தில் சட்டப் பாதுகாப்பை வழங்குதல்
- குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதற்கான ஓய்வு காலம்
- ஒரு வருடம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்பது இதனூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
- முழுச்சம்பளம், அரைச்சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ( ஒரு வருடம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தல் வழங்க ஒரு மணி நேர ஒய்வு என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன).
- தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பிற்காக சட்ட விதிகளை உருவாக்குதல்
- இச்சட்டத்தினூடாக கரு உருவாகி 5 மாதம் வரையில் கருவுக்கு பாதிப்பு வரும் வகையிலான எந்தவொரு காரியத்தையும் கடமையைும் தாயை ஈடுபடுத்தக்கூடாது. அதேபோல் குழந்தை பிறந்து 3 மாதங்கள் வரையிலும் தாய் பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுத்தக்கூடாது.
மகப்பேற்று விடுமுறை – குழந்தை உயிருடன் பிறந்தால்
- 12 வார விடுமுறை
அதில் இரண்டு வாரங்கள் பிரசவத்துக்கு முன்பே பெற்றுக்கொள்ள முடியும்.
பிரசவத்துக்கு முன்னர் பெறவேண்டிய விடுமுறை எடுக்கப்படாதபட்சத்தில் 10 வார முடிவில் அதனை பெற முடியும்.
12 வாரகால விடுமுறையில் ஏனைய வார இறுதி, பௌர்ணமி, பெருநாள் விடுமுறைகள் உள்ளடக்கப்படமாட்டாது.
(கடை மற்றும் அலுவலக சட்டத்தில் 84 வேலை நாட்கள் விடுமுறை வழங்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு ஊதிய நிர்வாக சபைகள் 42க்கு அமைய நிறுவனங்களில் விடுமுறையில் மாற்றங்கள் ஏற்படலாம்)
குழந்தை உயிரற்று பிறந்தால்
- 6 வார மகப்பேற்று விடுமுறை உரித்தானது
பிரசவத்துக்கு முன்பாக 2 வாரங்களும் பின்னர் 4 வாரங்களும் இதில் உள்ளடக்கப்படுகின்றன.
பிரசவத்துக்கு முன்னர் பெற்றுக்கொள்ளாத விடுமுறையை 4 வார முடிவில் பெற்றுக்கொள்ள முடியும். - குறித்த 6 வார காலத்தில் ஏனைய விடுமுறைகளையும் வழங்குதல் வேண்டும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான ஓய்வு நேரம்
- குழந்தைக்கு ஒரு வயது வரையில் முழு வேலைநேரத்தில் காலையில் ஒரு மணித்தியாலமும் மாலையில் ஒரு மணித்தியாலமும் தாய்ப்பால் கொடுப்பதற்காக ஓய்வு வழங்கப்படும்.
- அவ்விரு மணி நேர ஓய்வை எவ்வாறு பெறுவது என்பதை தாய் தீர்மானிக்க முடியும், தொழில் வழங்குநர் தீர்மானிக்க முடியாது.
- தாய்ப்பால் கொடுப்பதற்கான பகல் நேர பராமரிப்பு நிலையம் அலுவலகத்தில் இருக்குமானால் அரை மணித்தியாலத்திற்கு குறையாத நேரம் இரு வேளை ஓய்வு வழங்கப்படவேண்டும். சில நிறுவனங்கள் தமது தலையகத்தில் பணியாற்றும் தாய்மாருக்கு அங்குள்ள பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கும் குழந்தைகளுக்கு பாலூட்ட அரை மணி நேர விடுப்பு இரு நேரங்கள் வழங்குகின்றன. தமது கிளைக் காரியாலயங்களில் பணியாற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு அவ்விடுப்பு வழங்காவிடினும் வழங்குவதாக தெரிவிக்கின்றனர். அவ்வாறான நிலை இருக்குமாயின் அது தொடர்பில தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்து தமக்கான இரு மணி நேர விடுப்பை பெற்றுக்கொள்ள முடியும். இந்நேரத்தை பாலூட்டும் தாய் தனது வசதிக்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும்.
- தாய் மற்றும் குழந்தையின் நலனுக்கான சட்டவிதிகளை உருவாக்குதல்
- குழந்தை பிரசவித்த தினம் தொடக்கம் ஒரு மாதகாலத்திற்கு பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
- பிரசவத்திற்கு 3 மாதத்திற்கு முன் கருவுக்கும் குழந்தை பிறந்து 3 மாதத்திற்கு குழந்தைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படும் வகையிலான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
- கருவுற்றல் அல்லது தொடர்பான நோய்வாய்ப்படல் தொடர்பில் பணிநீக்கம் செய்தவது சட்டப்படி தவறாகும்.
1954 இல 19 கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டத்தின் 18 வது சரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பிரசவ விடுமுறை உரிமை
- குழந்தை பிறப்புக்கு 84 நாட்களும் குழந்தை இறந்து பிறந்தால் 42 நாட்களும் விடுமுறை உரித்துடையதாகிறது.
- அவ்விடுமுறையை பிரசவத்திற்கு 14 முதலும் பின்னர் 70 நாட்களுமாக பெற்றுக்கொள்ள முடியும்.
- பிரசவத்திற்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்படாத விடுமுறை பின்னரான 70 நாட்கள் நிறைவின் பின்னர் பெற்றுக்கொள்ள முடியும்.
- அரச நிர்வாக சுற்றுநிரூபம் இல 04/2005 இற்கு அமைய ஊதியத்துடன் கூடிய விடுமுறை.
- குழந்தை பிறந்து 4 கிழமைகளுக்கு முதல் பணிக்கு சமூகமளிக்க இடமளிக்கக்கூடாது.
- ஆரோக்கியமாக குழந்தை பிறப்பின் 84 அரச வேலைநாட்கள்
அரச விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறையில் உள்ளடக்கப்படாது. - எஞ்சியிருக்கு வருடாந்த விடுமுறையில் கழிக்கக்கூடாது
- குழந்தை பிறக்கும் போது அல்லது பிறந்த 6 வாரங்களுக்குள் இறந்தால் 6 வார விடுமுறை உரித்துடையதாகும்.
- அரைச்சம்பள மற்றும் சம்பளமற்ற விடுமுறை குழந்தை பராமரிப்புக்காக வழங்கப்படும்.
அரைச்சம்பள விடுமுறை 84 நாட்கள்
- சம்பளமற்ற விடுமுறை 84 நாட்கள்
இதில் வார இறுதி மற்றும் அரச விடுமுறைகள் உள்ளடக்கப்படும்.
குழந்தை இறந்தால் 7 தினங்கள் விடுமுறை ரத்தாகும்.
தாய்ப்பால் கொடுப்பதற்கான விடுப்பு
- அரை சம்பள விடுமுறை பெற்றுக்கொள்ளாவிட்டால் குழந்தைக்கு 06 மாதம் நிறைவுறும் வரை ஒரு மணி நேரம் முன்பதாக அலுவலகத்தில் இருந்து செல்ல முடியும்
- கர்ப்ப காலத்தில் விசேட நிவாரணம்
- கர்ப்ப காலத்தில் 5 மாத பூர்த்தியில்
- அரை மணி நேரம் தாமதமாக அலுவலகத்திற்கு வருகைத் தரவும் முன்னராக வீடு திரும்பவும் அனுமதித்தல்
மேற்கூறப்பட்ட சட்டங்கள் உங்கள் பணியிடங்களில் செயற்படுத்தப்படாதபட்சதில் நீங்கள் தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு நாம் தாய்மாரிடம் கோருகிறோம். குறிப்பாக 2018ம் ஆண்டு செய்யப்யப்பட்ட திருத்தங்களுக்கமைவாக செயற்படாதிருந்தால் தொழில் திணைக்களத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் திணைக்களத்திற்கு 011 2369800/ 0112369297 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக அல்லது தொழில் திணைக்களத்தின் கீழியங்களம் 40 மாவட்ட தொழில் நிறுவனங்கள் அல்லது 17 உப தொழில் நிறுவனங்களுக்கு தொலைபேசியினூடாக அல்லது கடிதம் மூலம் முறைப்பாடு செய்ய முடியும்.
நன்றி – இணையம்