முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைள் குறித்தும் முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் ஒன்றியம் அரச நிருவாக ,அனர்த்த முகாமைத்துவ, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
அக்கடிதத்தல் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து தற்போதைக்கு நான்கரை வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. 2015 ஆண்டு தொடக்கம் இன்று வரை முகாமைத்துவ சேவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் தாங்களுடன் 7 தடவைகள் கலந்துரையாடியுள்ளோம். அதேபோல் 2019ம் ஆண்டு பெப்ரவரி 27ம் திகதி மற்றும் செப்டெம்பர் 23 ம் திகதி ஆகிய தினங்களில் பாரிய வேலைநிறுத்தப்போராட்டத்தையும் முன்னெடுத்தோம். எனினும் எந்தவகையிலும் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே நீங்கள் எமக்கு வழங்கினீர்கள் என்பதை மிக கவலையுடன் உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.
2019 செப்டெம்பர் வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு பின்னர் எமது தொழிற்சங்கங்களை அழைத்து சுமார் 3 மணித்தியாளங்களுக்கு மேலதிகமாக அலையவிட்டு நிர்வாக அதிகாரிகளுக்கான 15,000 கொடுப்பனவு தொடர்பில் எமக்கும் நியாயமான தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்தீர்கள். ஆனால் அது நீரில் எழுதிய எழுத்து போன்று எந்த பயனையும் கொடுக்கவில்லை.
அரச நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு 50,000 ரூபா அல்லது 15,000 ரூபா கொடுப்பனவு வழங்குவது குறித்து எமது தொழிற்சங்கங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த கொடுப்பனவுகளுக்கமைய ஏனைய அதிகாரிகளுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என்பதே எமது முன்மொழிவாகும். எனினும் எமது கோரிக்கையை கவனத்திற்கொள்ளாது நிர்வாக அதிகாரிகளுக்கு மட்டும் அக்கொடுப்பனவை வழங்க தாங்கள் எடுத்த தீர்மானம் குறித்து நாம் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேபோல், முகாமைத்துவ அதிகாரிகள் அரச அலுவலங்களில் பிரதான முகாமைத்துவ சேவை அதிகாரிகள் என்ற பதவியை வகிப்பது எமது சேவையின் உரிமையாகும். எனினும் அபிவிருத்தி அதிகாரிகள் அதற்கு கீழ்படியாது நடந்துகொள்வதாகவது அலுவலக கட்டமைப்பில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே எமது சேவையின் தரம் 11 அதிகாரிகளுக்கு MN 4 சம்பள அளவில் வைக்க வேண்டும் என்று நாம் கோரியிருந்தோம். எனினும் எமது அனைத்து கோரிக்கைகளுக்கும் மிக அமைதியாக இருந்து பிரச்சினையிலிருந்த நழுவுவதற்கு ஏதேதோ கூறுகிறீர்கள்.
அத்துடன், ஆசிரியர், அதிபர் சேவை, தபால் சேவை என்பவற்றுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் எமது சேவையினை கவனத்திற்கொள்ளாமையானது எமது சேவை அதிகாரிகளுக்கு பெரும் மனத்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே எமக்கும் இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காவது நடவடிக்கை எடுக்குமாறு கோருவதுடன் எதிர்வரும் புதன்கிழமைத் தொடக்கம் ஒவ்வொரு புதன்கிழமையும் உணவு இடைவேளையில் அரச நிருவாக அமைச்சின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தயாராக உள்ளோம். இவை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பை பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.